25/12/2023 (1024)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓய்வெடுக்கும் பருவத்தில் எது வறுமை என்றால் நுண்ணுணர்வு இன்மை. அது இருந்துவிட்டால் அவர்கள்தாம் பெருஞ்செல்வர்கள். இஃது நாலடியார்.
நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம். - 251; நாலடியார்
அந்த நுண்ணுணர்வு சிலரிடம்தாம் அமைகிறது.
நம்மாளு: பலர் அந்த நுண்ணுணர்வைப் பெறாமல் இருப்பதற்குக் காரணம் ஏதாவது இருக்கிறதா?
ஆசிரியர்: ஆம். இருக்கிறது. தவ முயற்சி செய்யச் செய்ய நுண்ணுணர்வு தோன்றும். அஃது எப்படியென்றால் “நான்”, “எனது” என்ற பற்றுகளை அறுத்ததாலே நடுவுநிலைமை தோன்றும். பார்வை விரியும். மற்ற உயிர்களின் மேல் அருளைக் கொண்டு பார்ப்பதனால் பல புதிய அனுபவங்கள் நிகழும். குறளைப் பார்க்கலாம்.
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். – 270; - தவம்
இலர் பலர் ஆகிய காரணம் = நுண்ணுணர்வு என்னும் செல்வம் இல்லாதவர்கள் பலர் இருக்க காரணம் என்னவென்றால்; நோற்பார் சிலர் பலர் நோலாதவர் = தவத்தை மேற்கொள்பவர்கள் சிலராகவும் அதை மேற்கொள்ளாதவர்கள் பலராகவும் இருப்பதுதாம்.
நுண்ணுணர்வு என்னும் செல்வம் இல்லாதவர்கள் பலர் இருக்க காரணம் என்னவென்றால் தவத்தை மேற்கொள்பவர்கள் சிலராகவும் அதை மேற்கொள்ளாதவர்கள் பலராகவும் இருப்பதுதாம்.இதனுடன் தவம் அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.
எந்தப் படி நிலையில் இருந்தாலும் கூடா ஒழுக்கம் நம்மை கிழே இறக்கிவிடும். எனவே தவத்தைத் தொடர்ந்து கூடா ஒழுக்கம் அதிகாரத்தை வைத்துள்ளார்.
ஒழுக்கமுடைமையை (14 ஆவது அதிகாரம்) இல்லறவியலில் வைத்தார், கூடா ஒழுக்கத்தைத் துறவறவியலில் வைத்துள்ளார். கூடா ஒழுக்கம் என்பது மற்றவர் முன் நல்லவர்போல் நடித்து வாழ்வது. இதைக் குறித்தும், இந்த அதிகாரத்தின் முதல் குறளைக் குறித்தும் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 29/09/2021. மீள்பார்வைக்காக:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். - 271; - கூடா ஒழுக்கம்.
வஞ்ச மனத்தின் மறைவான, மாறுபாடான ஒழுக்கத்தைப் பார்த்து நம்மோடு கலந்துள்ள பூதங்கள் ஐந்தும் உள்ளுக்குள்ளேயே சிரிக்கும்.அவை வேறு ஒன்றுமல்ல நம் மனசாட்சிதாம். நம் மனத்தைக் கொன்று நினைத்தை சாதிக்கலாம் என்கிறார்கள்.
… நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சிமக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சிஅரங்கத்தில் வராது அவன் சாட்சி கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே …
சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே --- கவியரசர் கண்ணதாசன், என் அண்ணன், 1970
உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு வானுயர் தோற்றம் மட்டும் காட்டினால் அதனால் என்ன பயன் என்கிறார் நம் பேராசான்.
வானுயர் தோற்றம் எவன் செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின். – 272; - கூடாஒழுக்கம்
தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் = தாம் அறிந்தே குற்றங்களை இழைப்பதைத் தன் நெஞ்சம் அறிந்திருக்கும்போது; வான் உயர் தோற்றம் எவன் செய்யும் = ஒருவர் தாம் எவ்வளவு நல்லவர் என்று வெளி உலகிற்குக் காண்பிக்க எந்த உயரத்திற்கும் சென்று வேடம் போடுவதால் என்ன பயன்?
தாம் அறிந்தே குற்றங்களை இழைப்பதை தன் நெஞ்சம் அறிந்திருக்கும்போது, ஒருவர் தாம் எவ்வளவு நல்லவர் என்று வெளி உலகிற்குக் காண்பிக்க எந்த உயரத்திற்கும் சென்று வேடம் போடுவதால் என்ன பயன்?
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios