03/03/2022 (370)
தோழியாலே தாங்க முடியலை. சரி, இன்றைக்கு ‘அவனை’ப்பார்த்து இவளின் கருத்துகளைச் சொல்லிவிடலாம் என்று அவனை சந்திக்கிறாள்.
அவன்: என்னம்மா செய்தி? அவளும், நீயும் சேர்ந்து கொண்டு மௌனமாக இருப்பது என்று முடிவு பண்ணிட்டீங்களா?
தோழி: அப்படியெல்லாம் இல்லைங்கண்ணா. அவள் புலம்பலும், அவள் காட்டும் உதாரணங்களும் அவ்வளவு அழகா இருக்கு. அதிலே நானும் மயங்கிவிட்டேன். இருந்தால் அவளைப் போல இருக்கனும்.
அவன்: அப்படியா? என்னிடம் பேசாமல் நாடகம் போடுகிறாளா?
தோழி: நாடகமும் இல்லை; ஒன்றும் இல்லை. அவ போதையில் இருக்கிறாள். அதுவும் கள்ளுண்ட போதையில் இருக்கிறாள்.
அவன்: ஓஒ.. அப்படியா? இது எப்போதிலிருந்து? அதான் அவ நடை தடுமாறுதா? நான் கண்டுபிடுச்சுடுவேன் என்றுதான் அவ தள்ளியிருக்கிறாளா?
தோழி: ஐய்.. நீங்களே போதையை கொடுத்துட்டு என்கிட்ட கேட்கறீங்களா?
அவன்: இது என்ன புது கதை?
தோழி: சொல்வதற்கு எனக்கும் கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கு. நீங்க பெரிய திருடன் போல?
அவன்: போதும்மா. முதல்ல போதையை கொடுத்தேன்னு சொன்ன, இப்போ, திருடன்னும் சொல்றே…
தோழி: ஆமாம். நீங்க செய்வது எல்லாமே ரொம்ப மோசம்தான்.
அவன்: அம்மா தாயி, போதும்மா உன் குற்றசாட்டுகள். ரொம்ப நீளமாத்தான் போகுது. நானே நொந்துபோயிருக்கேன். எதாவது நல்ல செய்தி இருந்தா சொல்லு.
தோழி: இருக்கு. இந்த குறளை படிங்க. உங்களுக்கு புரியும்.
அவன்: ‘ங்கே’ன்னு விழிக்கிறான்.
இதோ அந்த குறள்:
“இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வ நின் மார்பு.”--- குறள் 1288; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் = கள்ளுண்டு சுகம் கண்டவர்களிடம் என்னதான் இழிவான செயல் செய்தாலும் அந்த கள்ளையே தேடுவது போல; கள்வ நின் மார்பு = அவளுக்கு, கள்ளைப் போன்றது உன் மார்பு.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Yorumlar