29/04/2024 (1150)
அன்பிற்கினியவர்களுக்கு:
நூல்களைக் கற்கும் வாய்ப்பு இல்லையென்றாலும் நன்கு கற்று அறிந்தவர்கள் சொல்லும் பொழுது கேட்டு அறிவைத் தெளிவாக்கிக் கொள்வது நமக்கு ஒரு ஊன்று கோல் போலத் துணை செய்யும் என்றார். காண்க 02/11/2021. மீள்பார்வைக்காக:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாம் துணை. - 414; - கேள்வி
யார் யார் வாய்ச் சொல்லைக் கேட்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அறிவு மட்டும் நிறந்திருந்தால் போதாது. அவர்களிடம் ஒழுக்கமும் நிறைந்திருக்க வேண்டும் என்கிறார்.
இழுக்க லுடையுழி ஊற்றுகோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். – 415; - கேள்வி
இழுக்கல் = வழுக்கல், சறுக்கல்; உடையுழி = ஏற்படும் பொழுது;
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் = கல்வி, கேள்விகளால் சிறந்து விளங்கியும், மேலும், போற்றத் தக்க ஒழுக்கத்தினை உடையவர்கள் சொல்லும் கருத்துகள்; இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே = ஒருவர்க்கு வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுது ஊன்று கோலாக இருந்து காப்பாற்றும்.
கல்வி, கேள்விகளால் சிறந்து விளங்கியும், மேலும், போற்றத் தக்க ஒழுக்கத்தினை உடையவர்கள் சொல்லும் கருத்துகள், ஒருவர்க்கு வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுது ஊன்று கோலாக இருந்து காப்பாற்றும்.
ஒழுக்கமுடையவர்கள் தங்கள் மனமறிந்து தீச் சொல்களைச் சொல்ல மாட்டார்கள். எனவே, அவர்களின் சொல்களைக் கூர்ந்து கவனிக்க என்கிறார்.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். – 417; - கேள்வி
ஈண்டிய = பெற்ற; இழைத்து = ஆராய்ந்து;
இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் = உண்மைப் பொருள்களை ஆராய்ந்து, தெளிவாக உணர்ந்து, மேலும், அவர்களைவிட சிறந்த அறிஞர் பெருமக்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றவர்கள்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் = அவர்களுக்கும் தெளிவில்லாத கருத்துகள் சில இருக்குமாயின் அவற்றையும், பிறர்க்குத் தீமை பயக்கும் சொல்களையும் ஒருபோதும் சொல்லார்.
உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணர்ந்து, மேலும், அவர்களைவிட சிறந்த அறிஞர் பெருமக்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றவர்களுக்கும் தெளிவில்லாத கருத்துகள் சில இருக்குமாயின் அவற்றையும், பிறர்க்குத் தீமை பயக்கும் சொல்களையும் ஒருபோதும் சொல்லார்.
இந்தக் குறள் மூலமாக ஒழுக்கமுடையவர்கள் யார் என்பதனை வரையறுத்துள்ளார் நம் பேராசான். வழுக்கும் வழியைத் தவிர்த்து வாழும் வழியைச் சொல்பவர்கள் அவர்கள்! இதற்காகத் தனியானதொரு அதிகாரமாகப் பெரியாரைத் துணை கோடலை வைத்துள்ளார். இந்த அதிகாரத்தில் உள்ள பாடல்களையும் நாம் சிந்தித்துள்ளோம்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments