அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
உரையாடல் மேலும் தொடர்கிறது...
நாங்க மட்டும் என்ன எங்களுக்கும் “செய் அல்லது செத்து மடி”தான் தோழா. நாம் அனைவரும் வீரர்களே. அதில் நம் எல்லாருக்கும் பெருமைதான்.
ஒன்று பொதுபடச் சொல்வேன் தோழா!
போரை வென்றுதான் திரும்புவேன் என்று சூளுரைத்துச் சென்று வீரப் போரிட்டு அந்த எண்ணம் நிறைவேறுவதற்குள் ஒரு வீரன் வீர மரணம் எய்தினால் அவன் தோற்றுவிட்டதாக யாரும் நினைக்க மாட்டார்கள். அவன் வெற்றிக்காக விதைக்கப் பட்டிருக்கிறான் என்று புகழ்ந்துதான் பேசுவார்கள்.
இந்தப் பாடலில் ஒரு ஆமையைச் சொல்கிறார். அது என்ன ஆமை?
அதுதான் “இகவாமை”!
ஆமை என்றால் அமையாமல் இருப்பது. முயலாமை என்றால் முயற்சி அமையாமை அதாவது சோம்பி இருப்பது.
இகவாமை என்றால்? இகவு + ஆமை. இகவு அமையாமல் இருப்பது.
அது சரி, இகவு என்றால் என்ன? இகவு என்றால் நீங்குதல், விலகிப்போதல் இப்படிப் பொருள்படும். இகவாமை என்றால் (எடுத்த சபதத்தில் இருந்து) விலகிப் போகாமல் உறுதியுடன் இருத்தல்.
கச்சியப்ப முனிவர்பிரான் காஞ்சிப் புராணத்தில் இரண்டாவது காண்டத்தில் உள்ள பன்னிரு நாமப்படலத்தில் 322 ஆவது பாடலில் ‘இகவு’ என்றச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
“அரசு உரிமைத் தொழில் இகவு பெறத் தனி அடல் வலி சூதினும்
விரைசெறி குங்கும முலையினரின்பினும் வீழ்வகை கண்டு பகைப்
புரசை மதக்கரி யரசர்கள் வென்றிகொள் பொழுதிஃ தாமெனவே
யுரைசெயு முன்னெதிர் படைகொடு முற்றின ரொலிகடல் சூழ்ந்ததென ...” பாடல் 322, பன்னிரு நாமப் படலம், இரண்டாவது காண்டம், காஞ்சிப் புராணம்.
பொருள்: அரசுரிமை தன்னை விட்டு நீங்குமாறு சூதிலும் பெண் இன்பத்திலும் அரசன் வீழ்வதைக்கண்டு பகையரசர்கள் அவனை வெற்றி கொள்வதற்கு இதுவே தக்க தருணமென்று விரைந்து படையெடுத்து வந்து கடல் சூழ்ந்ததென முற்றுகையிட்டனர்.
இது நிற்க. நாம் குறளுக்கு வருவோம்.
“இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.” --- குறள் 779; அதிகாரம் – படைச் செருக்கு
இழைத்தது = இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி எடுத்தது; இகவாமை = அதிலிருந்து விலகாமல், பின் வாங்காமல்; சாவாரை யாரே = அந்த முயற்சியிலேயே வீர மரணம் எய்துவாரை யாரே; பிழைத்தது = சபதத்தை முடிக்காமல் தோற்றுவிட்டானே என்று; ஒறுக்கிற்பவர் = பழித்துப் பேசுபவர்.
“இதைச் செய்து முடிப்பேன்” என்று உறுதி எடுத்ததிலிருந்து பின் வாங்காமல் அந்த முயற்சியிலேயே வீர மரணம் எய்துவாரை எவரும் “சபதத்தை முடிக்காமல் தோற்றுவிட்டானே” என்று பழித்துப் பேசமாட்டார்கள்.
மகிழ்சி வீரனே, மிக்க மகிழ்சி. நாளை சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare