02/04/2021
கைகள் நீளட்டும்!
செருக்கு, கோபம், கீழான பேராசை முதலான செயல்கள் முதல் மூன்று குற்றங்கள் என்ற குறள் 431 ஐ தொடர்ந்து குறள் 432 ல் அடுத்த மூன்று குற்றங்களை கூறுகிறார் நம்ம வள்ளுவப்பெருந்தகை.
அதுக்கு முன்னாடி ஒரு கதையை பார்க்கலாம்!
நம்ம பெரும்புலவர் ஔவையார் ஒரு நாள் சேர மன்னனிடம், ஒரு பெண்ணுக்கு சீதனமாக கொடுப்பதற்கு ஒரு ஆடு வேணும்னு கேட்டாங்களாம். அதை கேட்ட அந்த ராஜா, அமைச்சரை கூப்பிட்டு காதிலே ஏதோ சொல்லி அனுப்பினாராம்.
ஔவையார் பெருமாட்டியை நல்லா உபசரித்து அவங்கிட்ட தமிழில் இருந்த சந்தேகங்களையெல்லாம் கேட்டுட்டே இருந்தாராம் ராஜா. நேரம் போயிட்டே இருந்துதாம். ஆடு வந்த மாதிரி இல்லை. ஔவையார் அவர்களுக்கு ஒன்றும் புரியலை. இருந்தாலும் அமைதியா அமர்ந்திருந்தாங்களாம்.
அப்ப தான் அந்த அமைச்சர் வேக வேகமா உள்ளே வந்தாராம். அரசே, ஆடு வெளியே தயாரா இருக்கு. புலவர் எப்போ போகனும்னு நினைக்கறாங்களோ அப்போ அவங்க போவதற்கும் ஒரு தேரும் தயாராயிருக்குன்னு சொன்னாராம்.
தெய்வப்புலவர் ஔவையாரும், சரி, அப்போ நான் கிளம்புகிறேன்னு சொல்லிட்டு வெளியே வந்து பார்த்தாங்களாம்.
அவங்களுக்கு ஆச்சரியமாயிட்டுது. பெரும் புலவர் இல்லையா? ஒரு பாட்டு ஒன்று பாடினாங்களாம். அதன் பொருள் என்னவென்றால், நான் கேட்டது சீதனமாக கொடுப்பதற்கு ஒரு சின்ன ஆடு. அவன் கொடுத்ததோ மிகவும் உயர்ந்த பொன்னால் ஆன ஆடு. பிச்சை கேட்பவர்கள் அவங்க கேட்டது தான் கிடைக்கனும்னு நினைக்க மாட்டாங்க. (Beggars cannot be choosers) எது கொடுத்தாலும் எடுத்துப்பாங்க. ஆனால், கொடுப்பவர்கள் அவங்க தரத்துக்கு சற்றும் குறைவில்லாம கொடுப்பது தான் அவங்களோட பெருமதிப்பை காட்டும்ன்னு சொன்னாங்களாம்.
"சிரப்பான் மணிமவுலிச் சேரமான் றன்னைச்
சுரப்பாடி யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்,
இரப்பவ ரென்பெறினுங் கொள்வர், கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர்."
சரி, சரி குறள் எங்கேன்னு கேட்கறது புரியுது. இதோ:
“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.” …குறள் 432; அதிகாரம் - குற்றங்கடிதல்
இவறலும் = ஒருத்தருக்கு தேவைபடும் போது கொடுக்காமல் இருப்பதும்; மாண்பு இறந்த மானமும் = சும்மாவே பந்தா பண்ணுவதும்; மாணா உவகையும் = தரமற்ற கொக்கரிப்பும்; இறைக்கு ஏதம் = தலைமை தவிர்க்க வேண்டிய குற்றங்கள்.
உதவும் கைகள் நீளட்டும். மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments