17/02/2023 (715)
திருக்குறளில், பொருட்பாலில், அரசு இயலில், இறைமாட்சி (39ஆவது) அதிகாரம் தொடங்கி, கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42), அறிவுடைமை(43), குற்றங்கடிதல் (44), பெரியாரைத் துணைக்கோடல் (45), சிற்றினஞ்சேராமை (46),தெரிந்து செயல்வகை (47), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடனறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), தெரிந்து வினையாடல் (52), சுற்றந்தழால் (53), பொச்சாவாமை (54), செங்கோன்மை (55), கொடுங்கோன்மை (56), வெருவந்த செய்யாமை (57). கண்ணொட்டம் (58), ஒற்றாடல் (59) ... இப்படி, தலைமைக்குத் தேவையானவைகளை ஒவ்வொன்றாக சொல்லிவந்தார் நம்ம பேராசான்.
(அடுக்கியுள்ள முறைமையைப் பாருங்கள். இதுவே ஒரு சிறப்பு, வியப்பு)
சரி, இதெல்லாம் இருந்தும் என்ன பயன்? முக்கியமான ஒன்று இல்லையென்றால்? எல்லாம் வீண்.
அந்த முக்கியமான ஒன்று என்ன என்பதைத்தான் அடுத்துச் சொல்கிறார்.
அது தான் ஊக்கம்! தாளாண்மை, தளரா முயற்சி, mental toughness என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒன்றே. இதுதான் மிக முக்கியம்.
Winner never quits, quiter never wins. வெற்றியையும் தோல்வியையும் பிரிக்கும் ஒரு புள்ளி எது என்று கேட்டால் அதுதான் முயற்சி, அதுதான் ஊக்கம்!
வெற்றி பெற வேண்டுமா விடா முயற்சி; முயற்சியை விட்டுவிட்டால் அந்தக் கணம் தோல்வி தொடங்குகிறது.
பல ஆமைகள் நம் இல்லத்தில் குடியேறி இருக்கலாம். இயலாமையாலோ, இல்லாமையாலோ ஒருவன் தோற்பதில்லை; ஆனால், முயலாமையால் தான் தோற்கிறான். இதைத்தான் நம் பேராசான் சொல்லத் தொடங்குகிறார்.
உயிர்களுக்கு அடிப்படை இயல்பு ஊக்கம். ஊக்கம் மட்டும் இல்லை என்றால் அந்த உயிர்கள் இந்த உலகில் இல்லை என்றே சொல்ல வேண்டும். மற்ற எது இருந்தும் ஊக்கம் இல்லை என்றால் எல்லாம் வீண்! – இதெல்லாம் நான் சொல்லலைங்க, நம்ம பேராசான் சொல்கிறார். ஒரே போடாகப் போடுகிறார் இப்படி:
“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையர் உடையரோ மற்று.” --- குறள் 591; அதிகாரம் – ஊக்கம் உடைமை
உடையர் எனப்படுவது ஊக்கம் = (ஒருவனுக்கு) இருக்கு என்று சொன்னால் அது ஊக்கம்; அஃதுஇல்லார் = அந்த ஊக்கம் இல்லாதவர்; மற்று உடையர் உடையரோ = மற்றவைகள் எது இருந்தாலும் இருந்ததாக கணக்கு ஆகுமா?
ஒருவனுக்கு இருக்கு என்று சொன்னால் அது ஊக்கம். அந்த ஊக்கம் இல்லாதவர்களிடம், மற்றவைகள் எது இருந்தாலும் இருந்ததாக கணக்கு ஆகுமா? ஆகாது.
இப்படி ஒரே போடாகப் போட்டார் நம்ம பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments