29/08/2021 (187)
கடந்த ஞாயிற்றுக் கிழமை (22/08/2021) ரக்ஷா பந்தன். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ராக்கி எனும் காப்பினைக் கட்டி ‘நாங்கள் இருக்கிறோம் உங்கள் பாதுகாப்பிற்கு’ என்று உறுதி ஏற்பது, நம் இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் வழக்கம்.
பீகாரில், மன்மோகன் எனும் இருபத்தி ஐந்து வயதுள்ள இளைஞர் தன் தங்கைகளுக்கு மட்டுமல்லாமல் பாம்புகளுக்கும் ராக்கி கட்டினாராம். இவர், பாம்புகளுடன் பழகும் திறன் பெற்றவராம்! அன்றைய தினம், ஏனோ தெரியவில்லை, ஒரு பாம்பிற்கு ராக்கி பிடிக்கவில்லை போலும். அது தீண்டி அவர் மரணித்துவிட்டார்.
பாம்புகள் மட்டுமல்ல, வேறு விலங்குகளுடன் பழகும் போதும் மனிதர்கள் பலியாவது என்பதை நாம் நிறைய கேட்டு இருப்போம். சரி, இந்தக் கதையெல்லாம் இப்போ எதற்கு என்று உங்களுக்கு தெரியனும் அதானே? இதோ வருகிறேன்.
நல்லதொரு வாழ்க்கைத்துணை அமைவது என்பது இல்லறத்திற்கு ரொம்பவே அவசியம். கொஞ்ச நஞ்சம், இப்படி, அப்படி இருக்கலாம். அது பரவாயில்லை. ஆனால், அதிலே உட்பகை தோன்றிடின் என்னவாகும் என்று நம் வள்ளுவப் பெருமான் உருவகப் படுத்துகிறார் ஒரு குறளில்:
“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.” --- குறள் 890; அதிகாரம் – உட்பகை
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை = மனதளவிலே உடன்பாடு இல்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று = ஒரு குடிலுக்குள்ளே பாம்போட சேர்ந்து இருப்பது போல.
இந்தக் குறள், பொருட் பாலில் உள்ள அங்கவியலில், உட்பகை எனும் அதிகாரத்தின் கடைசி குறள்.
இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆத்திச்சூடி 78: பாம்போடு பழகேல் என்று நம் ஒளவை பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். எச்சரிக்கை.
கடப்பாடை கருத்தில் வைத்தால் உடன்பாடு உண்டாகும்! உடன்பாடு ஏற்பட்டால், உட்பகை இருக்காது. பாம்புகள் நுழையாது!
பாம்புகளை நுழையவிடாதீர்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்… உங்கள் அன்பு மதிவாணன்.
Comments