28/05/2023 (815)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
மிக்கார் அவையில் முந்திக் கொண்டு நம் கருத்தை வைக்கக் கூடாது என்றவர், அப்படி வைத்தால் அது நாம் கற்கும் பயணத்தை தளர்வடையச் செய்யும் என்றார் குறள் 715, 716 இல். காண்க 25/05/2023, 26/05/2023.
அடுத்து வரும் இரு குறள்கள் மூலம் ஒத்தார் இருக்கும் அவையைப் பற்றிச் சொல்கிறார்.
ஒத்தவர்கள் இருக்கும் இடத்தில் கூச்சம் இருக்கக் கூடாது. நான்கு இடங்களில் கூச்சம் பார்க்கக் கூடாது என்பதை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 18/04/2021 (91). மீள்பார்வைக்காக:
நான்கு விஷயத்துக்கு தயக்கப்படவோ, வெட்கப்படவோ, சங்கோஜப்படவோ கூடாது. அவையாவன: பண விவகாரம், சாப்பாடு, கல்வி, மற்றும் கலவி. மேலும் குறிப்பாக, பசிக்கும், பாரியாளிடமும் கூச்சம் நிச்சயமாகக் கூடாது. (மறந்திருந்தால், ஒரு எட்டு எட்டிப் போய் அதைப் படிச்சுடுங்க)
இந்த நான்குமே, ஒத்தாரிடம் நடக்கும்போதுதான் சிறப்பு என்பது இன்னுமொரு குறிப்பு.
ஒத்தார் என்றால் ‘நம்மாளுங்க’ என்று பொருள்! நம் விருப்பத்திற்கு கேட்டுக் கொள்ளலாம். சொல்லவும் கூடும்.
இதோ, நான், என் விருப்பதிற்கு உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன் அல்லவா! இது, ஒத்தவர்கள் என்பதால்தானே?
மாநாடு (Conference), கருத்தரங்கு (Seminar) and கருத்துப் பட்டறை (Workshop) என்று மூன்று வகைகளில், இக்காலத்தில் அவைகள் அமைவதைப் பார்க்கிறோம்.
பண்டையக் காலங்களிலும் வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அரசவை (அரசன், மந்திரிகள் உள்ளிட்டோர் அடங்கியது), மந்திரிகள் அவை (மந்திரிகள் தங்களுக்குள்ளே ஆலோசிக்கும் அவை), பொது அவை (பொது மக்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய அவை) என்று இப்படித்தான் இருந்திருக்கும்.
அந்த, அந்த அவைகளுக்கு ஏற்றார்போல் அமைச்சரானவர் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டதே அவையறிதல் என்னும் அதிகாரம்.
சரி, குறளுக்குப் போவோம்.
நம்மைப் போன்று கற்றுக் கொண்டு இருப்பவர்கள் முன், எந்தத் தயக்கமும் இல்லாமல், நாம் நம் கருத்துகளைச் சொல்வது என்பது, வளர்ந்து வரும் செடிக்கு தேவையான நீரினைப் பெறுவதைப் போல என்கிறார் நம் பேராசான்.
“உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.” --- குறள் 718; அதிகாரம் – அவையறிதல்
“உணர்வது உடையார் முன் சொல்லல்” என்பதற்கு இரு வகையில் பொருள் சொல்லலாம்.
ஒன்று: நாம் உணர்வதை, அதே தளத்தில் இருப்பவரிடம் சொல்வது. சேர்ந்து மேம்பட உதவும் என்ற வகையில்!
இரண்டு: நமக்கு சற்று முன்பு பயணித்தவரிடம் (கற்றவரிடம், அனுபவப்பட்டவரிடம்) சொல்வது. ஏனெனில், அவருக்கு நமது சிக்கல் உடனடியாக புரியும் என்பதனால்!
இந்த இரண்டுமே எப்படிப்பட்டது என்றால்:
வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று = பயிர்கள் வளர்ந்து வரும் பாத்தியினுள் தேவைகேற்ப நீரினைப் பெறுவது போல.
ஒத்தார்கள் அவையில் நாம் நமது கருத்துகளைச் சொல்வது பயிர்கள் வளர்ந்து வரும் பாத்தியினுள் தேவைகேற்ப நீரினைப் பெறுவது போல. நமது அறிவினை மேலும் வளர்க்க வழி செய்யும்.
பாத்தி என்பதிலும் ஒரு குறிப்பு இருக்கிறது. நாம் பெறும் கருத்துகளாகிய நீரைப் பாதுகாக்கும் வகையில் பாத்திக் கட்டி வைக்க வேண்டும் என்பதனையும் உணர்த்துகிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments