18/04/2021 (91)
அந்த நாலு விஷயம்
நாலு விஷயத்துக்கு தயக்கப்படவோ, வெட்கப்படவோ, சங்கோஜப்படவோ கூடாதாம். அது என்ன என்னன்னு பார்ப்போம்.
ஒன்று: பண விவகாரம். அதிலே தயக்கம் காட்டக்கூடாதாம். உதாரணமாக, ஒருத்தர் கடனுக்கு பொறுப்பு கையெழுத்து கேட்கிறார். அது நமக்கு ஒத்து வரலைன்னா உடனே முடியாதுன்னு சொல்லிடனமாம். முடியாதுன்னு சொல்லாம அதிலே போய் மாட்டிட்டு முழிக்கக் கூடாதாம்.
இரண்டு: சாப்பாடு. சாப்பிடும் போது வெட்கப்படக்கூடாதாம். தயங்கி, தயங்கி சாப்பிடாம இருக்கக்கூடதாம்.
மூன்று: கல்வி. கற்கும் போது உள்ள ஐயங்களை கேட்டு தெரிஞ்சிக்க தயக்கம் கூடாதாம். கேட்டா ஒரு தடவை தான் முட்டாளு. கேட்கலைன்னா வாழ்க்கை முழுதும் முட்டாளு.
நான்கு: (இது A சமாச்சாரம்). கலவியின் போது கலக்கம், தயக்கம், வெட்கம் இருக்கக்கூடாதாம்.
இதெல்லாம் ஏதோ நான் சொன்னதுன்னு நினைக்காதீங்க. இது சாணக்கிய நீதியில இருக்க ஒரு பாட்டு. நம்ம அவ்வையார் கூட சொல்லியிருப்பாங்க. தேடிப்பார்க்கணும்.
நம்மாளின் புதுமொழி: பசிகிட்டயும் பாரியா கிட்டயும் வெட்கப்பட்டா வேலைக்கு ஆகாது!
இந்த இரண்டு விஷயத்தை கலந்து நம்ம வள்ளுவப்பேரசான் ஒரு குறள் போட்டுள்ளார். அந்த சரியான குறளை அனுப்பிய இளவல்கள் ரத்தனுக்கும் அருணாவிற்கும் நன்றிகளும், வாழ்த்துகளும். இதோ அந்த குறள்:
உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. - 1326; அதிகாரம் - ஊடல் உவகை
(சொல் பொருள் பின்வருநிலையணி: ‘இனிது’ இருவிடங்களிலே அதே சொல், அதே பொருள்)
உணலினும் = உண்பதைக் காட்டிலும்; உண்டது அறல் = பயன் தருமாறு செரிப்பது; இனிது = இனிது; காமம் புணர்தலின் = இணையர் இருவர் கலந்து மகிழ்தலினும்; ஊடல் = முன்பு கலந்து இருந்த அந்த இன்பத்தை ஊடலின் காரணமாக பிரிந்து இருக்கும் போது அசை போடுதலினால் அந்த ஊடல்; இனிது = இனிது
மருந்தை விட்டுட்டு இங்கே வந்துட்டோம். தொடர்வோம் நாளை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்
Comments