02/03/2022 (369)
தோழி: இன்றைக்கு என்ன கதை?
அவள்: உனக்கு ரொம்பத்தான் எளக்காரமா போயிடுச்சு.
ஆற்றில் புது வெள்ளம் வந்தால் இளசுகள் அதில் குதித்து விளையாடுவார்கள். அந்த வெள்ளம் அவர்களை இங்கும் அங்கும் இழுத்துச் செல்லும். ஒருவாறு அதிலிருந்து தப்பி கரையேறுவார்கள். அதில் ஒரு மகிழ்ச்சி (Thrill, kick) இருக்கத்தானே இருக்கு. சும்மா, ஆற்றின் கரையோரமே நின்று கொண்டு நியாயம் பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கு அது எப்படி தெரியும்?
துள்ளல் நிறைந்த இளசுகளுக்கு என்னதான் நாம எச்சரிச்சாலும் அவங்களாலே கரையிலேயே நிற்க முடியாது.
அதுபோலதான் என் நிலைமையும், அவர்கூட சண்டை போடனும் என்று நினைத்தாலும் அது பொய்த்துப் போகும். அன்பு எனும் வெள்ளத்தில் குதிப்பது உறுதி. அதில் நீந்தியும் வெற்றி பெறுவேன். பிறகு எதற்கு அந்த ‘ச’வன்னாவெல்லாம். அதைக் கேட்கவே பிடிக்க மாட்டேன் என்கிறது என் மனசு.
தோழி: (மறுபடியும் ‘ங்கே’ தான்) சரிம்மா தாயி இதற்கு ஏதாவது குறள் வைத்திருக்கிறாயா?
அவள்: ஆமாம், இதோ அந்த குறள்
“உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.” --- குறள் 1287; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
புனல் = வெள்ளம்; உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் = மகிழ்ச்சியாக இருப்போம் என்று வெள்ளத்தில் பாய்பவர்கள் போல; பொய்த்தல் அறிந்தென் புலந்து = (அன்பென்னும் வெள்ளத்தில் பாயாமல் மகிழ்ச்சி பெறப் போவதில்லை), அது உறுதியாகத் தெரிவதால் சண்டை போடுவதால் என்ன பயன்.
இந்த குறள், ஒரு ஆழமானக் குறள். உறவில் அறிவைப் பயன்படுத்துவது அறியாமையே ஆகும். உறவில் உணர்ச்சிகளுக்குத்தான் முதல் இடம். அந்த உணர்ச்சிகளை சற்று நெறிப்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் அறிவைப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.
நாம ஏற்கனவே பார்த்த குறள்தான். மீள்பார்வைக்காக காண்க 23/12/2021 (303)
“உப்பமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.” --- குறள் 1302; அதிகாரம் – புலவி
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments