02/09/2023 (910)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பகையை நட்பாக்க வேண்டும் இது அடிப்படை (குறள் 871). சொல்லேர் உழவரின் பகையை அதாவது அறிஞர்களின் பகையைத் தவிர்க்க வேண்டும் என்றார் (குறள் 872). பலரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்றார் (குறள் 873). இந்த உலகம் பகையை நட்பாக்கி வாழும் பண்புடையாளனின் கீழ் தங்கும் என்றார் (குறள் 874).
சில சமயம் இரு பக்கத்தில் இருந்தும் பகைவர்கள் நெருக்கினால் அதில் ஒருவரைத் துணையாக்கிக் கொள் என்றார் (குறள் 875). சில காரணங்களால் ஒருவனுக்குத் தாழ்வு வரும்போது பகைகளைப் பற்றி சிந்திக்காதே என்றார் (குறள் 876). அது மட்டுமல்ல, நமக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வினை யாருக்கும் குறிப்பாக பகைவர்க்கு காட்டிக் கொடுக்காதே என்றார் (குறள் 877). மேலும், வகையறிந்து உன்னைச் சரி செய்துகொள். அப்படிச் செய்தால் பகைவரின் செருக்கு அழியும் என்றார் (குறள் 878).
அழிக்க வேண்டிய பகையை முளையிலேயே கிள்ளி ஏறி என்றும் சொன்னார் (குறள் 879). அழிக்க வேண்டியப் பகைகளைக் குறித்து ஏற்கெனவே பகைமாட்சியில் பட்டியலிட்டுள்ளார்.
என்ன ஒரு ஒழுங்கு பாருங்கள் இந்த குறள்களின் அமைப்பிலே! எல்லா பகைகளையும் அழிக்கத் தேவையில்லை என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கிறார். அப்படி அழித்துவிட்டால் “தனியே தன்னந்தனியே” விடப்படுவாய். அது உனக்கு மட்டுமல்ல உன் இனத்திற்கே அழிவு என்று அறுதியிட்டு உறுதியாக கூறுகிறார்.
இந்த அதிகாரத்தின் முடிவுரையாக ஒன்றைச் சொல்கிறார்.
அது என்னவென்று பார்ப்போம்.
“மன்ற” என்பது தேற்றப்பொருளைத் தரும் ஓர் இடைச்சொல். மன்ற என்றால் உறுதியாக, திண்ணமாக, தெளிவாக என்றெல்லாம் பொருள்படும்.
“செயிர்” என்றால் போர், குற்றம் என்று பொருள்படும்.
எதிராளி ஒருவரைத் திண்ணமாக அழிக்க முயல்கின்றார். அதற்கு எந்த ஒரு வினையையும் ஆற்றாமல் அவர் வெறும் மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று பொருள்படுமா? இல்லை.
அவர் வீழ்ந்துவிட்டார் என்றே பொருள்படும்!
சரி, என்ன செய்யவேண்டும் என்றால் ‘எது’ அந்த எதிராளிக்கு நம்மைத் தாக்கும் துணிவைக் கொடுக்கிறது என்பதை அறிந்து அவரின் அந்த ஆணவத்தை அழிக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பொருள். வெறும் மூச்சு விடுவதால் மட்டும் ஒருவர் உயிர் வாழ்கிறார் என்று சொல்லிவிட முடியாது என்கிறார் நம் பேராசான்.
“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.” --- குறள் 880; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
உயிர்ப்பு = மூச்சு விடுதல், புது பலம்; செம்மல் = ஆணவம்;
மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் = திண்ணமாக முடிவு செய்து அழிக்க வேண்டும் என்று புறப்பட்ட பகையின் ஆணவத்தைச் சிதைக்காமல்விடுபவர்; உயிர்ப்ப மன்ற உளரல்லர் = மூச்சு விடுவதாலேயே நிச்சயமாக உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்ல இயலாது.
திண்ணமாக முடிவு செய்து அழிக்க வேண்டும் என்று புறப்பட்ட பகையின் ஆணவத்தைச் சிதைக்காமல் விடுபவர், மூச்சு விடுவதாலேயே நிச்சயமாக உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்ல இயலாது.
ஏதும் செய்யவில்லை என்றாலே அவர் அழிவது திண்ணம் என்றும் பொருள்!
அவர் பின் மூச்சும் விட முடியாது!
இங்கே, கவனிக்க வேண்டிய சொல்லாடல் “செம்மல்”. அவனையே அழித்துவிடு என்பதல்ல பொருள். அவன் ஆணவத்தை அழி என்பதுதான் பொருள்.
புராணக் கதைகளில், உதாரணத்திற்கு, கந்த புராணத்தை எடுத்துக் கொள்வோம். முருகப் பெருமான் தன் பகையான சூரபதுமனை அழித்துவிடவில்லை. அவன் ஆணவத்தை மட்டுமே அழித்து அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன்னருகிலேயே வைத்துக் கொண்டார் என்கிறது கந்தபுராணம்.
இது பகுத்தறிவிற்கு சரிவரவில்லையே என்று வாதிக்கலாம். ஆனால், இதில் உள்ள குறிப்பு என்னவென்றால் பகையை எப்படிக் கையாள வேண்டும் என்பதுதான்! அதையும் எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற குறிப்பும் உடன் இருக்கிறது!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments