20/06/2023 (838)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று
உறுதிகொண்டிருந்தேன். --- மகாகவி பாரதி
திருக்குறளின் உறுதி, தெளிவு, பொருளின் ஆழம், விரிவு, அழகு இவைகள் இருப்பதால் திருக்குறள் அழிக்க முடியாதது; அமரத் தன்மை வாய்ந்தது. காலத்தைக் கடந்து இன்றும் நிற்பது.
காலம் கடந்து நிற்க வேண்டுமென்றால், நான்கு குணங்கள் இருக்க வேண்டுமாம். அவையாவன: உயர்வு, அகலம், திண்மை, அருமை.
உயர்வு அதாவது உயர்ந்து நிற்பது, அகலம் அதாவது பரந்துபட்டு இருப்பது, திண்மை அதாவது தெளிவும் உறுதியும், அருமை எட்ட முடியா இடத்தில் இருப்பது.
பாதுகாப்பு அதாவது அரணுக்கும் இந்த நான்குதான் என்கிறார் நம் பேராசான்.
“உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.” --- குறள் 743; அதிகாரம் – அரண்
உயர்வு அகலம் திண்மை அருமை இந் நான்கின் அமைவு = உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்படுகின்ற இந் நான்கு குணங்கள் ஒருங்கே அமைந்திருப்பதை; அரண் என்று உரைக்கும் நூல் = சிறந்த பாதுகாப்பு என்று நூல்கள் சொல்லும்.
உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்படுகின்ற இந் நான்கு குணங்கள் ஒருங்கே அமைந்திருப்பதைசிறந்த பாதுகாப்பு என்று நூல்கள் சொல்லும்.
இந்தக் குறள் ஏதோ கோட்டையின் மதில்களை மட்டும் சொல்வது போல இல்லை. நமக்கு எந்த ஒன்றும் பாதுகாப்பாக அமைய வேண்டுமென்றால் அந்தப் பொருள் உயர்ச்சி, அகலம், திண்மை, அருமை ஆகியவை அமைந்திருப்பது சிறப்பு.
அறிவுத் துறையில் இருந்தாலும் சரி, தொழில்சார் துறையாக இருந்தாலும் சரி அவர் அவர் துறைகளில் ஆழங்கால்பட்டால், அதுதான் அவர்களுக்கு அரண்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments