29/11/2023 (998)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒப்புரவு அறிதலுக்கு அடுத்து ஈகை, இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் முன்பு சிந்தித்துள்ளோம். ஈகையைத் தொடர்ந்து வருவது புகழ்.
இல்வாழ்க்கையின் பயன் எதுவென்றால் நாம் மறைந்த பிறகும் மறையாமல் நிற்கும் புகழ்தான் அது.
வண்ணத்துப் பூச்சிகள் நம் தோளில் அழகாக அமரலாம். அதை நாம் கை நீட்டிப் பிடிக்கப் போனால் அது உடனே பறந்துவிடும். புகழும் அதுதான்.
புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது, நம் செயல்கள் அதனை ஈர்க்க வேண்டும். விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் அறம். அதுவே புகழுமாம்.
இந்த உயிர்க்கு நிலைத்து நிற்கும் புகழைப் போல் ஓர் ஊதியம் இல்லை என்றார். காண்க 28/06/2021. மீள்பார்வைகாக:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. - 231; - புகழ்
இந்த உலகத்தார் நீண்ட நாள்களுக்குப் புகழ்ந்து பேசுவது எல்லாம் எதைக் குறித்து என்றால் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவியவர்களின் புகழைத்தான். அதுதான் காலம் கடந்தும் நிற்கும் என்றார். காண்க 29/06/2021. மீள்பார்வைக்காக:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். -232; – புகழ்
இந்த உலகம் அழியும் என்கிறார்கள். மீண்டும் மீண்டும் உருவாகும் என்கிறார்கள். ஆனால், நாம் அதனை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இந்த உலகமானது நமது அறிவிற்கு எட்டிய காலம்வரை அழியாமல் தன் மட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது அதற்கு அழிவு இல்லை என்றே தோன்றுகிறது. அது போல இன்னும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதாம்!
அது என்ன? அதற்கு நம் பேராசான் விடையளிக்கிறார். அது தான் புகழாம்! புகழைப் போல இந்த அழியா உலகில் நிலைத்து நிற்பது பிரிதொன்றும் இல்லை என்கிறார். இந்தக் குறளில் இருந்து இரு குறிப்புகள்: 1. இந்த உலகம் ஒன்றா உலகம் – அஃதாவது, ஈடு இணை இல்லா உலகம்; 2. அதில் அழியாமல் இருப்பது புகழ்.
ஒன்றா உலகத் துயர்ந்த புகழ் அல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில். - 233; - புகழ்
ஒன்றா உலகத்து = ஈடு இணையில்லாது நிலைத்து நிற்கும் இந்த உலகத்தில்; உயர்ந்த புகழ் அல்லாற் பொன்றாது நிற்பது ஒன்று இல் = ஓங்கிய புகழைத் தவிர அழியாமல் இருப்பது வேறு ஒன்றும் இல்லை.
ஈடு இணையில்லாது நிலைத்து நிற்கும் இந்த உலகத்தில் ஓங்கிய புகழைத் தவிர அழியாமல் இருப்பது வேறு ஒன்றும் இல்லை.
தொடர்ந்து வரும் குறள் சற்று சிந்திக்க வைக்கிறது. ஏன் எனில் அதில் நம் பேராசான் ஆண்டிருக்கும் சொல்கள் அவ்வாறு! நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments