04/05/2023 (791)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒரு பெரிய கோவில் தேர் தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்ததாம். தேர் பேசுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது பேசும் போது நீங்கள் போனால், உங்களை அதற்குப் பிடித்திருந்தால், அது தொடர்ந்து பேசும். நீங்களும் அது பேசுவதைக் கேட்கலாம். நீங்களும் அதனுடன் பேசலாம். முயற்சி செய்து பாருங்கள்.
சரி, செய்திக்கு வருவோம்.
அந்தத் தேரை பத்திரமாகப் பாதுகாக்க, அந்தக் கோவிலில், ஒரு மேற்கூரையிட்ட ஒரு இடத்தைத் தயார் செய்து கொண்டிருந்தாங்களாம். அவங்க பேசிட்டு இருந்ததை அந்தத் தேர் கேட்டுக் கொண்டிருந்ததாம்.
பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்: இருந்தாலும், இந்தத் தேர் ரொம்பத்தான் பெரியத் தேராக இருக்கிறது. இது கொஞ்சம் சின்னதாக இருந்தால் சுலபமாக இதற்கு ஒரு அறையைத் தயார் செய்துவிடலாம்.
இன்னொருவர்: அதற்கு ஏன் கவலைப்படுறீங்க. ஏதாவது ஒரு பகுதியை எடுத்து சின்னதாகச் செய்துவிடலாம்.
முதலாமவர்: சரி, என்ன செய்வது என்பதை நாளைக்குப் பார்ப்போம்.
என்று பேசிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தத் தேருக்கு ஒரே கவலை. எடுத்தால் எந்தப் பகுதியை எடுப்பார்கள்? என் அழகு கெட்டுவிடுமா என்று அதற்கு கவலை. கவலை வந்தால் மனம் சும்மா இருக்குமா? தனக்குத்தானே பேசிக்கொள்ளும்.
அந்தத் தேர் அதன் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து ஏன் உங்களை எடுக்க மாட்டாங்க? ஒரு காரணம் சொல்லுங்க என்றதாம்.
நான் முதலில் சொல்கிறேன் என்றதாம் பீடப் பகுதி. எல்லாப் பகுதியைவிட நான் தான் உயர்ந்தவன். ஏன் என்றால், என் மேல்தான் கடவுளே உட்காருகிறார். அது மட்டுமல்ல. என் இரு கைகளில்தாம், இரு சக்கரங்கள் மாட்டப்பட்டுள்ளது. அதனால் என்னை அவர்கள் தொடமாட்டார்கள் என்றதாம்.
அது எப்படி, நான் மட்டும் குறைச்சலா என்ன? சுவாமியையே நான்தான் வெய்யில் மழையிலிருந்து பாதுகாக்கிறேன் என்றதாம் கூரைப் பகுதி. அது மட்டுமல்ல, எனக்குத்தான் எல்லா அலங்காரங்களும். இதில் இருந்து உங்களுக்குத் தெரியவில்லை யார் முக்கியம் என்று. என்னைத் தொடமாட்டார்கள் என்றதாம் கூரை.
“எல்லோரும் கொஞ்சம் சும்மா இருங்க” என்று இரண்டு பக்கத்தில் இருந்தும் சத்தம் வந்ததாம். யார் அது என்று பார்த்தால். அந்தத் தேரின் இரு சக்கரங்கள்தாம் அவை. இந்தத் தேர் அழகாக ஊர்வலம் போக வேண்டுமென்றால் நான் உருள வேண்டும். நான் மட்டும்தான் ஓடி ஓடி உழைப்பவன். உங்கள் அனைவரையும் உருட்டிக் கொண்டு போவது என் வேலை. நான்தான் முக்கியம் என்னைத் தொடமாட்டார்கள் என்றதாம்.
எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கும் பகுதி எது என்று கேட்தாம் அந்தத் தேர். அதற்கு எல்லாப் பகுதிகளும் முகம் சுளித்துக் கொண்டு:
“அதோ, கறுப்பாய் களிம்பெல்லாம் பூசிக் கொண்டு இருக்கிறானே அந்த அச்சாணிகள்தாம் என்றதாம். நாங்களெல்லாம், ஏதோ முக்கியமான வேலைகளைச் செய்து கொண்டும், மேலும், உனக்கு அழகும் சேர்த்துக் கொண்டும் இருக்கிறோம். இவன் மட்டும்தான் அழுக்காக எந்த வேலையையும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டுள்ளான்” என்றதாம்.
தேர் சற்று நிதானமாக, நாளை என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டதாம்.
மறுநாள், அந்த இருவரும் வந்து தேரின் அனைத்து பாகங்களையுமே பிரித்து ஒரு மூலையில் அடுக்கி ஒரு கோணியைப் போட்டு மூடி விட்டார்களாம். மீண்டும் தேவைப்படும் போது பூட்டிக் கொள்ளலாம் என்றார்களாம்.
அதில் ஒருவர்: அண்ணே, அந்த அச்சாணிகளை மட்டும் நன்றாகச் சுத்தம் செய்து, மீண்டும் எண்ணெய் பூசி, ஒரு துணியில் சுற்றி, உள்ளே இருக்கும் அந்தப் பெட்டியில் பத்திரமாக வையுங்கள். அவைகள் தொலைந்துவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது என்றாராம்.
அச்சாணி பார்ப்பதற்கு சிறியதாகத்தான் இருக்கும். மேலும் அதில் எண்ணெய் பிசுக்குகளும் ஏறி அழுக்காகத்தான் இருக்கும். இருப்பினும், அந்தப் பெரியத் தேருக்கு முக்கியமானப் பகுதி எது என்றால் அந்த அச்சாணிகள்தாம்.
அதுபோல, நாட்டிலும் வினைத்திட்பம் உடையவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களினால்தாம் இந்த உலகம் உருண்டு கொண்டுள்ளது என்கிறார் நம் பேராசான்.
“உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து.” --- குறள் 667; அதிகாரம் – வினைத்திட்பம்
உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து = உருளும் பெரியத் தேராக இருப்பினும், தாம் உருளாமல் நிலைத்து நின்று அந்தத் தேரின் சக்கரங்கள் விலகி விழுந்துவிடாமல் காக்கும் அச்சாணிகளைப் போல வினைத்திட்பம் உடையவர்களைக் கொண்டது இந்த உலகு; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் = (எனவே) அவர்களின் உருவங்களைக் கண்டு நாம் ஏமாந்து எள்ளி நகையாடக் கூடாது.
உருளும் பெரியத் தேராக இருப்பினும், தாம் உருளாமல் நிலைத்து நின்று அந்தத் தேரின் சக்கரங்கள் விலகி விழுந்துவிடாமல் காக்கும் அச்சாணிகளைப் போல வினைத்திட்பம் உடையவர்களைக் கொண்ட து இந்த உலகு. எனவே, அவர்களின் உருவங்களைக் கண்டு நாம் ஏமாந்து எள்ளி நகையாடக் கூடாது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments