16/04/2024 (1137)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவர் இல்லம் திரும்புவது உறுதி என்று அவள் மனத்திற்குத் தெரிந்துவிட்டது. அவனும் விரைந்து வந்து கொண்டிருக்கிறான்.
அடுத்த பாடலுக்குள் நுழைவதற்கு முன் சில சொல்களைப் பார்ப்போம். உரன் என்றால் உறுதி, அறிவு, தின்மை என்று நமக்குத் தெரியும். குறள் 24 இல் பார்த்தோம். காண்க 06/08/2021. மீள்பார்வைக்காக:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. – 24; - நீத்தார் பெருமை
உரன் = அறிவு, உறுதி, திண்மை
அறிவு என்னும் அங்குசத்தால் யானைகளாகிய ஐந்து புலன்களையும் அவை தாம் நினைத்தாற் போல் செல்லவிடாமல் காப்பான். அத்தகையவன் எல்லா நிலத்திலும் மிகச் சிறந்தது என்னும் வீட்டு நிலத்திற்கு ஒரு விதையாம்.
நசை என்றால் இருவகையில் பொருள் சொல்லலாம். பொதுவாக நசை என்றால் ஆசை என்று பொருள்படும். காண்க 10/03/2024. மீள்பார்வைக்காக:
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு. - 1199; - தனிப்படர் மிகுதி
நசை = ஆசை, அன்பு
நான் அவரை நச, நச என்று நச்சினாலும் அவர் என்னமோ என்னிடம் அன்பு உள்ளவர் போலக் காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அவரைக் குறித்து யாரேனும் புகழ்ந்து பேசினால் என் காதுகளுக்கு அவை இசையாக இனிக்கதான் செய்கின்றன.
குறள் 1043 இல் நசை என்றால் கேடு என்ற பொருளும் இருப்பதாகப் பார்த்தோம். காண்க 26/01/2022. மீள்பார்வைக்காக:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை. - 1043; - நல்குரவு
நல்குரவு = வறுமை; நசை = கேடு
வறுமை என்னும் கேடு, பழைய குடிப்பண்பினையும், நல்ல சொல்களைப் பேசுவதையும் ஒரு சேரக் கெடுக்கும்.
இது நிற்க. நாம் அவள் சொல்வதைக் கவனிப்போம்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். – 1263; - அவர்வயின் விதும்பல்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் = இந்த உலகை வெல்ல பொருளும் தேவை என்ற அறிவின்பால் ஆசை வைத்து அதையே ஒரு குறிக்கோளாக உள்ளத்திலும் உறுதி ஏற்றுச் சென்றவர்;
வரல் நசை இ இன்னும் உளேன் = இப்போது தம் செயலில் வெற்றி கண்டு, என்னுடன் இணைய வருதல் வேண்டும் என்ற உணர்ச்சியின் உத்வேகத்தால், ஆசையால் விரைவாகத் திரும்ப வந்து கொண்டுள்ளார். அதனால் நான் இன்னும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த உலகை வெல்ல பொருளும் தேவை என்ற அறிவின்பால் ஆசை வைத்து அதையே ஒரு குறிக்கோளாக உள்ளத்திலும் உறுதி ஏற்றுச் சென்றவர், இப்போது தம் செயலில் வெற்றி கண்டு, என்னுடன் இணைய வருதல் வேண்டும் என்ற உணர்ச்சியின் உத்வேகத்தால், ஆசையால் விரைவாகத் திரும்ப வந்து கொண்டுள்ளார். அதனால் நான் இன்னும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரிவாற்றாமை அதிகாரம் தொடங்கி நிறை அழிதல் வரை கலங்கித் தீர்த்தவள், அவன் இல்லம் நோக்கித் திரும்புகிறான் என்று உணர்கிறாள். அதற்காக நம் பேராசான் அவர்வயின் விதும்பல் என்னும் அதிகாரம் படைத்துள்ளார். அவர்வயின் விதும்பல் என்றால் இணைய வேண்டும் என்ற விருப்பம் இருவரிடமும் எழுதல் என்று பொருள். காண்க 14/04/2024.
இந்த அதிகாரத்திலும் அவளைப் புலம்பவிடுதல் நன்றாக இராது என்பது எனது எண்ணம். அடுத்துவரும் அதிகாரங்களில் அவர்கள் இணைந்து விடுகிறார்கள் என்பதும் எண்ணத்தக்கது.
அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகளையும் பார்ப்போம்.
செந்தமிழ்க் காவலர் சி. இலக்குவனார்: வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா: என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
மனக்குடவர் பெருமான்: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments