முற்றும் துறந்தவர்களின் பெருமையை முதல் மூன்று குறள்களில் சொன்ன நம் பேராசான் அவர்களின் இலக்கணத்தை அடுத்த குறளில் (24வது குறள்) கூறுகிறார்.
நாம் மருந்து அதிகாரத்தில் 947வது குறளைப் பார்த்த போது பார்த்தது:
“நமக்கு ஐந்து புலன்கள் இருக்கு. அவையாவன: கண், காது, மூக்கு, வாய், தோல். இந்த புலன்களை ஞானேந்திரியங்கள்ன்னு சொல்றாங்க. இந்த புலன்கள் மூலமாக நாம் பல செய்திகளை உள்வாங்குகிறோம். அதைக் கொண்டு தான் நம் செயல்கள் அமைகின்றன. புலன் நுகர்ச்சிக்கு அடிமையாவது மனித இயல்பு. நாம சுதந்திரமா இருக்கனும்னா கவனமாக இருக்கனும். அப்போ, அதே புலன்கள் நமக்கு அடிமையாக இருக்கும். ஒழுங்காக வழிகாட்டும்.” ன்னு பார்த்தோம். கீழே இருக்கும் பாட்டை பார்த்தீங்கன்னா உங்களுக்கு நாம பார்த்தது கவனத்துக்கு வரலாம்!
“கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா … “கவியரசு கண்ணதாசன்
இந்தப் பாடலில் கவிஞர் ‘கண்’ என்று போட்டிருக்கிறார். நாம மற்ற புலன்களையும் போட்டுக்கலாம். புலன்கள் ஐந்தும் ஐந்து மத யானைகளைப் போலவாம். ஒன்றை அடக்கவே ஒருவரால் முடியாது. ஐந்தும் அது அது நினைத்தாற் (இஷ்டம்) போல ஒடினால்? ரொம்ப கஷ்டம்.
நம்மாலே அடக்க முடியுமா? நாம அதை அழகா “weakness” பலவீனம்ன்னு சொல்லிட்டு கடந்துடறோம்.
நமக்கும் நீத்தார்களுக்கும் உள்ள வித்தியாசம் அங்கே தான் இருக்காம். அவர்களிடம் மேலான மன வலிமை என்கிற அறிவாயுதம் இருக்குமாம். எது போல என்றால், யானைகளை அடக்க பயன்படும் அங்குசம் போலவாம்.
புலன்களை ஒருத்தர் அடக்கனுமா, அவங்களுக்கு தேவை அறிவாயுதம். அதைத் தவிர வேற இல்லை. புறக் கட்டுப்பாடுகள் (external restraints) புலன்களை அடக்கப் பயன்படாதாம்.
அறிவாயுதத்தை எங்கே போய் தேடுவது? அவர்களின் உரைகளில்தான்.
அந்த நீத்தார்களின் உரைகள், பலரை அவர்களின் வழியில் இட்டுச்செல்லுமாம். அவர்களைப் போலவே மாற்றுமாம். அதனாலே அவர்கள் இருக்கும் உயர்ந்த இடமாகிய ‘வீடு’ என்கிற இடத்திற்கு அவர்கள் ஒரு விதை போலவாம்ன்னு சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை இந்த குறளில்:
“உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.” – குறள் 24; அதிகாரம் – நீத்தார் பெருமை
உரன் = திண்மை, அறிவு; தோட்டியான் = அங்குசத்தால்; ஓரைந்தும் காப்பான் = (யானைகளாகிய) ஐந்து புலன்களையும் அது அது நினைத்தாற் போல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பு= (எல்லா நிலத்திலும் மிகச்) சிறந்தது என்னும் வீட்டு நிலத்திற்கு; ஒர் வித்து = ஒரு விதையாம்
‘அங்குசம்’ன்னு மட்டும் சொல்லிட்டு ‘யானை’ என்ற சொல்லை சொல்லவில்லை. இது ‘ஏக தேச உருவகம்’ ன்னு சொல்றாங்க. அதாவது, ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நம் கற்பனைக்கு விடுவது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários