10/03/2022 (377)
காதலிலும், அன்பிலும் கட்டுண்டவர்கள் உலகமே தனி. அங்கே அறிவுக்கு வேலையில்லை.
(அப்ப நாம எல்லாம்? நாம எல்லோரும்தான் பலவகையிலே) ஒரு குழந்தையை தூக்குகிறோம், அது நம்மை எட்டி உதைக்கிறது. நாம் அதற்காக கோபிப்போமா என்ன? மாறாக இன்னும் சிரித்து விளையாடுவோம்.
கணக்கு பண்ணுவது வேண்டுமானால் காதலில் இருக்கலாம். ஆனால் கணக்கு பார்ப்பது அன்பினில் இருக்கக்கூடாது. கணக்கு பார்த்தால் அது வியாபாரம்.
இல்லறமே அன்பைப் பயிலும் களம். எதற்காக? அதன் பயன்தான் அருளாக மாறும். மறுபடியும் தத்துவத்துக்கு வந்துவிட்டேன். இது நிற்க.
அவள் தன் நெஞ்சோடு பேசுகிறாள்:
அவருக்கு என்மேல் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. ஆனால், நீ செய்வது அதிசயமாக இருக்கிறது. நான் அவரிடம் சென்றால் என்மேல் கோபம் கொள்ளமாட்டார் என்று அவர் பின்னாலாயே செல்கிறாய். இது போல ஒரு அறியாமை ஏதாவது இருக்கா?
“உறாஅதவர்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர் எனச்சேறிஎன் நெஞ்சு.” --- குறள் 1292; அதிகாரம் – நெஞ்சோடு புலத்தல்
என் நெஞ்சு = என் நெஞ்சே; உறாஅதவர் கண்ணும் = அன்பு இல்லாதவரிடம்;
செறாஅர் = கோபம் கொள்ளமாட்டார்; எனச்சேறி = என்று நினைந்து அவர்பின் செல்கிறாய். இது போல ஒரு முட்டாள்தனம் ஏதாவது இருக்கா?
நம் பேராசான் ஒரு கற்பனைக்கடல்தான். என்ன அழகாக ஒரு சமாதனத்தை கொடுக்கிறார். இன்பத்துப் பாலை படிக்க படிக்க அன்பு பெருகும்.
நான் எப்போதும் வியக்கும் குறள் ஒன்று இருக்கு. மிகவும் பயன் உள்ள குறள் என்று சின்ன வயதிலேயே மனனம் செய்த குறள் இது:
நம்மை வேண்டாம் என்று சொல்பவர்களிடம் மீண்டும் செல்லாமல் இருப்பதுதான் கெத்து; ஆனால், அன்பிலே கட்டுண்டவர்களுக்கு, அது கிடையாது. பின்னாடி போகாம இருக்கிற ‘கெத்து’ அவர்களுக்குத் தெரியாது. அந்த அருமையான, அழகான குறள் இதோ:
“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.” --- குறள் 1255; அதிகாரம் – நிறையழிதல்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை = நம்மை வேண்டாம் என்று சொல்பவர்களிடம் மீண்டும் செல்லாமல் இருப்பதுதான் கெத்து; காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று = ஆனால், அன்பிலே கட்டுண்டவர்களுக்கு பின்னாடி போகாத கெத்து தெரியாது.
என்ன அருமையான, அழகான குறள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments