11/03/2024 (1101)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவரைக் குறித்து யாரேனும் புகழ்ந்து பேசும் பேச்சுகள் என் காதுகளுக்கு இனிமையாக அமைகின்றன என்றாள். அதைச் சொல்லி முடித்த உடன் மீண்டும் வருத்தம் அவளை ஆழ்த்துகிறது.
மனத்திற்குச் சொல்கிறாள்: கடலைத் தூர்ப்பது எளிது என்பது உனக்குத் தெரியுமா?
மனம்: எளிதா?
அவள்: நான் படும் துன்பத்தைச் சொல்லி அவருக்குப் புரிய வைத்துவிடலாம் என்று நினைக்கிறாய்! அதைவிட எளிது கடலையே தூர்ப்பது!
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. – 1200; - தனிப்படர் மிகுதி
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் வாழிய நெஞ்சு = அன்பில்லாதவர்க்கு நான் படும் துயரங்களைச் சொல்கிறாய். நீ வாழ்க. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைவிட எளிதான காரியம் ஒன்று சொல்கிறேன் கேள்; கடலைச் செறாஅஅய் = உலகப் பரப்பைச் சூழ்ந்திருக்கும் கடல் இருக்கிறதே கடல், அதனை முயன்றால் நீ தூர்த்துவிடலாம்.
அன்பில்லாதவர்க்கு நான் படும் துயரங்களைச் சொல்கிறாய். நீ வாழ்க. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைவிட எளிதான காரியம் ஒன்று சொல்கிறேன் கேள். உலகப் பரப்பைச் சூழ்ந்திருக்கும் கடல் இருக்கிறதே கடல், அதனை முயன்றால் நீ தூர்த்துவிடலாம்.
தனிப்படர் மிகுதி அதிகாரத்தை நிறைவு செய்கிறார். அவளைத் தனியாகப் புலம்பவிட்ட நம் பேராசான், இருவருக்குமே பிரிந்திருப்பது இனிக்குமா என்ன என்ற கேள்வி எழ, பொதுப்பட அடுத்த அதிகாரமாக நினைந்தவர் புலம்பலை அமைக்கிறார்.
கள்ளும் போதை, காமமும் போதை. ஆனால், இதிலே சிறந்தது எதுவென்றால் காமம்தான் என்று மூன்று குறள்களில் எடுத்து வைக்கிறார் நம் பேராசான். இரு குறள்களைப் பார்த்துள்ளோம். காண்க 04/09/2022, 25/02/2022. மீள்பார்வைக்காக:
உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. - 1090; - தகை அணங்கு உறுத்தல்
கள்ளு குடித்தவர்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியைத் தரும். குடிக்கலைன்னா ஒன்றுமில்லை. ஆனால், காதலில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டாலே ஒரு இன்பம்தான். அது அவளுக்குத் தெரியலையே!
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. - 1281; - புணர்ச்சி விதும்பல்
அவரை/அவளை நினைத்தாலே இனிக்கும், பார்த்தாலே போதைதான். அந்த மயக்கம் கள்ளுக்கு இல்லை, அன்பிற்கு உண்டு.
நினைந்தவர் புலம்பலில் முதல் குறளாக அவனின் குரல்.
அவளை நினைத்தாலே போதைதான் என்கிறான்.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. – 1201; நினைந்தவர் புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் = அவளை நினைத்தாலே போதைதான். அதுவும் தீராத போதை. அது என்னுள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதனால்; கள்ளினும் காமம் இனிது = கள்ளின் போதையைவிட காமத்தின் கிளர்ச்சி இனிமையானது, சுகமானது.
அவளை நினைத்தாலே போதைதான். அதுவும் தீராத போதை. அது என்னுள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதனால் கள்ளின் போதையைவிட காமத்தின் கிளர்ச்சி இனிமையானது, சுகமானது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments