17/05/2023 (804)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினை செயல்வகை அதிகாரத்தின் தொகுப்பினைத் தொடர்வோம். ஒப்பானுக்கு, மூன்றாவது குறளாக:
“செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.” --- குறள் 677; அதிகாரம் – வினை செயல்வகை
ஓப்பான், ஒரு செயலைச் செய்யப்புகும் முன், அச் செயல்களை முன்னரே செய்து அதன் வழிமுறைகளை அறிந்தவனின் உத்திகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிக்கிறார்.
அடுத்து வரும் மூன்று குறள்கள், 678, 679, 680 இன் மூலம் மெலியானுக்குச் சொல்கிறார்.
குறள் 678 இல்
“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.” --- குறள் 678; அதிகாரம் – வினை செயல்வகை
எதாவது மறைமுகச் செயல்கள் மூலம் எதிராளியை வழிக்குக் கொண்டுவர முடியுமா என்று பார் என்கிறார். காண்க 14/05/2023.
குறள் 679 இல்
“நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.” --- குறள் 679; அதிகாரம் – வினை செயல்வகை
ஆளைச் சேர்த்து வலிமையாகு என்கிறார். நீ சேர்க்காமல் விட்டால் பகைவன் அவர்களைச் சேர்த்துக் கொண்டு மிகவும் வலியவனாகிவிடுவான். ஆகையினால், விரைந்து செய் என்கிறார். காண்க 15/05/2023.
கடைசிக் குறளுக்கு வந்துவிட்டோம்.
போரில் பணிவது சிறப்பில்லை என்றாலும், இந்தப் போரினால் தமது குடி மக்கள் தாம் அழிந்துவிடுவோமோ என்று எண்ணி அஞ்சும்போது, தானும் அஞ்சி வலியவனிடம் சமாதானமாகப்போவது உலக வழக்கு என்று இறுதியாக ஒரு அறிவுரையைச் சொல்கிறார்.
“உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.” --- குறள் 680; அதிகாரம் – வினை செயல்வகை
உறை = இருக்கும் இடம்; உறை சிறியார் = தமது நாடு சிறியது என்று உணரும் அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி = வரப்போகும் போரினால், தமது மக்கள் அச்சப்படுவதற்கு தானும் அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வர் = விட்டுக் கொடுத்துப் போக வாய்ப்பு கிடைக்குமாயின், வலியவர்களிடம் சமாதானமாகச் செல்க.
தமது நாடு சிறியது என்று உணரும் அமைச்சர்வரப்போகும், தமது மக்கள் அச்சப்படுவதற்கு தானும் அஞ்சி, விட்டுக் கொடுத்துப் போக வாய்ப்பு கிடைக்குமாயின், வலியவர்களிடம் சமாதானமாகச் செல்க.
வலியவர்கள் மெலியவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகத் தேவையில்லை.
ஆகையினால், “பெறின்” என்றார். அதாவது, அந்த வாய்ப்பு கிடைக்குமானால், வீறாப்பு பேசாமல் விட்டுக் கொடுத்துச் செல்வதும் வினை செயல்வகை என்கிறார்.
வினை செயல்வகை அதிகாரம் ஒரு நுட்பமான அதிகாரம்.
அதனால்தான், செயல்களைச் செய்யும்போது, நீக்குப் போக்குப் பார்த்துச் செய்யணும் என்று சொல்கிறார்கள்!
நீக்கு = விலகி நிற்பது; போக்கு = அடித்து ஆடுவது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios