27/07/2023 (875)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கழலின் அழகினைச் சொன்னப் பாங்கு மிக அழகாக இருக்க (குறள் 777) எதிர் அணியினர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வீரனே, நன்று சொன்னாய்! எங்களைப் பற்றி உனக்குச் சொல்லவேண்டும். எங்கள் தலைமை எங்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டால் போதும், அந்தச் செயல் முடியும்வரை எங்களைத் தடுக்க அந்தத் தலைமையாலும் முடியாது.
“நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்!” – திரைப்பட வசனம் போல இருக்கு. இந்தக் குறளைப் பார்த்துதான் இப்படி ஒரு வசனம் எழுதினாங்களோ?
“உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.” --- குறள் 778; அதிகாரம் – படைச் செருக்கு
உறின் உயிர் அஞ்சா மறவர் = போர் உறினும், அதாவது போர் என்று வந்துவிட்டால் அதற்கு அஞ்சாது களத்துள் நுழைந்துவிட்ட வீரர்கள்;
இறைவன் = தலைவன்; செறினும் = போதும் விடுங்க என்றாலும்; சீர் குன்றல் இலர் = எடுத்தச் செயலை முழுக்க முடிக்காமல் விடமாட்டார்கள்.
போர் என்று வந்துவிட்டால் அதற்கு அஞ்சாது களத்துள் நுழைந்துவிட்ட வீரர்கள்; தலைவன் “போதும் விடுங்க” என்றாலும் எடுத்தச் செயலை முழுக்க முடிக்காமல் விடமாட்டார்கள்.
இன்னுமொன்று சொல்வேன். எங்கள் விரர்களுக்கு மரணம் உறுதியென்ற நிலையில் எங்கள் தலைமை திரும்ப அழைத்தாலும் வீர மரணம் எய்துவார்களேத் தவிர உயிருக்கு அஞ்சிப் பின் வாங்க மாட்டார்கள்.
அதாவது “செய் அல்லது செத்துமடி” இதுதான் எங்கள் வீரர்தம் தாரக மந்திரம் என்றான்.
இந்தக் கருத்துக்கு ஈடாக என்ன சொல்வது என்பது இப்போது அடுத்த அணிக்குச் சிக்கல்.
(போருக்கு போங்கப்பான்னா உட்கார்ந்து பேசியே முடிச்சுடுவாங்கப் போல!)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments