top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை ... 761

12/07/2023 (860)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒரு தலைவனுக்கு அமைய வேண்டிய சிறந்த செல்வங்கள் அல்லது அங்கங்கள் ஆறு என்றும், அவை படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்றும் சொன்னவர் படையின் சிறப்பை படை மாட்சியில் சொல்கிறார்.

நம் பேராசான், ஒவ்வொரு அதிகாரத்திலும், அதன் தலைப்பின் சிறப்பை உணர்த்த, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த அதை உயர்த்துவார்!


அதைப்போல, இந்த அதிகாரத்தில் படை என்கிற செல்வத்தை உயர்த்துகிறார்.


என்னதான் ஆறு அங்கங்களாகியச் செல்வங்கள் இருந்தாலும் படை என்கிற செல்வம் இருக்கிறதே அதுதான் முதன்மை என்கிறார்.


‘உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை’ ஒரு நாட்டிற்கு, ஒரு தலைவனுக்கு வேண்டும் என்கிறார்.


அந்தக் காலத்தில் படையின் உறுப்புகள் என்றால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகும். அதைத்தான் நமது பழங்காலத் திரைப்படங்களில் ‘ரத கஜ துரக பதாதிகள்’ என்பர்!


தற்காலத்தில் இந்தப் படைகள், பெரும்பான்மைக் கருதி, தரைப் படை, வான் படை, கடல் படை, உளவுப் படை என்றாகிவிட்டன.


நம் பேராசானின் கெட்டித்தனம் “உறுப்பு” என்று மட்டும் சொன்னதால், அந்த அந்தக் காலத்திற்கு ஏற்றார்போல் நாம் உறுப்புகளை பகுத்துக் கொள்ளலாம்!


உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.” --- குறள் 761; அதிகாரம் – படை மாட்சி

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை = படைகளின் உறுப்புகள் சரியாக அமைந்து, வரும் இன்னல்களுக்கு அஞ்சாமல் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை = தலைவனுக்கு அமையும் செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது.


படைகளின் உறுப்புகள் சரியாக அமைந்து, வரும் இன்னல்களுக்கு அஞ்சாமல் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் படை, தலைவனுக்கு அமையும் செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது.


படை என்றால் கருவி என்றும் பொருள்படும். ஒரு செயலைச் செய்ய தக்க கருவிகள் இருந்துவிட்டால், அதுவும் தக்க சமயத்தில் உறுதியுடன் கை கொடுக்கும் கருவிகள் இருந்துவிட்டால், எந்தச் செயலிலும் வெற்றிதான்.


தற்காலத்தில் வாளைத் தூக்க வேண்டாம், துப்பாக்கியைக் கூடத் தூக்க வேண்டாம். அறிவு என்னும் ஆயுதம் போதும் வெல்வதற்கு. அதைத்தான் நமக்கு அண்மை வரலாறுகள் நமக்குத் தெரிவிக்கிறது.


வாளெடுத்தவன் வாளால் அழிகிறான்; துப்பாக்கித் தோட்டாக்களுக்கு குண்டுகள் பதிலாக அமைகிறது.


அகிம்சை என்னும் அறவழிப் படைகள்தான் தேவை. ஆயுதம் ஏந்தியப் போராட்டங்கள் நிலைத்த வெற்றியைத் தந்ததாகச் சரித்திரம் இல்லை.


... ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே

வருங்காலத்திலே நம் பரம்பரைகள்

நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே ...

... ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ...” கவிஞர் வாலி, ஆயிரத்தில் ஒருவன் (1965)


‘நான் சாதிப்பேன்’ என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. ‘நான் மட்டும்தான் சாதிப்பேன்’ என்பது பயங்கரமானது. வன்முறைக்கு வித்திடுவது!


ஏறக்குறைய இருநூறாண்டுகள் நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நமது அடிமை வரலாற்றில் நமது மக்கள், உயிருக்கு அஞ்சி, வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றதில்லை.


ஆனால், இலங்கையில் நடந்த முப்பது ஆண்டு கால இனப்போராட்த்தில் இலட்சக் கணக்கானோர் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்தனர்! முடிவு எதுவுமே எட்டப்படவில்லை. நிலைமை மாறியதா என்றால் அந்தக் கேள்வி அப்படியே இருக்கிறது.


மக்களின் சக்தியை நம்பாமல் ஆயுதங்களை மட்டுமே வைத்து வெற்றி கிடைக்காது என்பதற்கு ஒரு துன்பமயமான உதாரணம் அது.


துப்பாக்கிகளுக்கே உரித்தான பண்பு என்னவென்றால் அது ஒலிக்க காரணங்களைத் தேடுவதில்லை. உயிர்கள் இருந்தால் போதும்! இதுதான் அவலம்.


இன்றும் நமது திரைப்படங்களில் வன்முறைகளால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதைப்போல வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்!


கண்ணுக்கு கண் என்றால் இந்த உலகப்பரப்பு கண் இல்லாதவர்களால்தான் நிரப்பப் பட்டிருக்கும். (An eye for an eye will make the whole world blind).


அறிவென்னும் ஆயுதத்தை எடுக்கச் சொன்ன பேராசான்களுக்கு மாலையிட்டுவிட்டு அதே கையால் கொடுவாளையும் எடுத்துக் கொண்டு கொலைவெறியில் திரிவது ஒரு துன்பமயமான முரண்.

இது நிற்க.


படையின் சிறப்புகளை விரித்த நம் பேராசனின் வரிகளுக்கு அறிவு வெளிச்சம் பாய்ச்சி பொருள் காணுவோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page