top of page
Search

உறுப்பொத்தல் ... 993, 329, 420

18/01/2024 (1048)

அன்பிற்கினியவர்களுக்கு:

மக்கள் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்தான் மாக்கள். மக்கள் என்ற சொல்லை பதினைந்து முறை பயன்படுத்தியுள்ளார். மாக்கள் என்பதை இருமுறை கையாண்டுள்ளார்.

 

மக்கள் பண்பு இல்லாதவர்கள் மாக்கள். கண், கால், வாய், மூக்கு போன்ற உறுப்புகள் ஒன்று போல இருக்கலாம். இருப்பினும், நல்ல பண்புகள் அவர்களிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்தால்தான் அவர்கள் மக்களா, மாக்களா என்று அறியமுடியும் என்கிறார்.

 

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. – 993; - பண்புடைமை

 

வெறுத்தக்க பண்பு = சிறந்த பண்பு; உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று = உறுப்புகள் ஒத்திருப்பதாலேயே மக்கள் என்று ஒப்புக்கொள்ள முடியாது; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் = எதை ஒப்பு நோக்க வேண்டும் என்றால் நல்ல சிறந்த மனிதப் பண்புகள் அமைந்திருக்கிறதா என்று ஒப்பு நோக்க வேண்டும். அதுதான் மக்களைப் பிரித்து அறியும் வழி.

 

உறுப்புகள் ஒத்திருப்பதாலேயே மக்கள் என்று ஒப்புக்கொள்ள முடியாது. எதை ஒப்பு நோக்க வேண்டும் என்றால், நல்ல சிறந்த மனிதப் பண்புகள் அமைந்திருக்கிறதா என்று ஒப்பு நோக்க வேண்டும். அதுதான் மக்களைப் பிரித்து அறியும் வழி.

 

பிறரை இம்சை செய்து வாழ்பவர்களை மக்கள் என்று எவ்வாறு சொல்ல இயலும். அவர்கள் மாக்களே என்கிறார்.

 

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து. – 329; - கொல்லாமை

 

புன்மை = இழிசெயல்கள்; புன்மை தெரிவார் அகத்து = எவையெல்லாம் தவிர்க்க வேண்டிய இழிசெயல்கள் என்று நன்கு அறிந்தவர்களின் உள்ளத்தில்;

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் = பிறரைக் கொல்வதையே தங்கள் வாழ்வியலாகக் கொண்ட இழிந்த செயல்களைச் செய்யும்  மாக்களினை இயல்பாகக் கண்டறிந்து விலக்கி வைப்பார்கள்.

 

எவையெல்லாம் தவிர்க்க வேண்டிய இழிசெயல்கள் என்று நன்கு அறிந்தவர்கள், பிறரைக் கொல்வதையே தங்கள் வாழ்வியலாகக் கொண்ட இழிந்த செயல்களைச் செய்யும்  மாக்களினை இயல்பாகக் கண்டறிந்து விலக்கி வைப்பார்கள்.

 

கொல்லுதல் என்பது பல வடிவங்களில் இருக்கும். கொல்லுதலைக் கடைபிடிப்பவர்கள் மாக்கள் – இது மாக்களுக்கான முதல் குறிப்பு.

 

அவர்கள் தாமாகவே உணர்ந்து சுய அறிவைக் கொண்டு கொல்லுதல் உள்ளிட்ட தீயச் செய்லகளை விலக்கிவிட்டு மக்கள் ஆகிவிடலாம்.

 

இல்லையென்றால், பிறர் எடுத்துக்கூறும்போது அதைக் கவனித்துத் தம்மைத் திருத்திக் கொள்ளலாம். அதுவும் இயலாதென்றால் அவர்கள் மாக்கள் என்பதை உறுதி செய்துவிட்டார்கள். அவை வாழ்ந்தால்தான் என்ன? அழிந்து போனால்தான் என்ன என்று அறச் சீற்றம் கொண்டு சீறுகிறார்.

 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென். – 420; - கேள்வி

 

செவியின் சுவை உணரா = சான்றோர் பெருமக்கள் சொல்லும் அறக் கருத்துகளைக் கேட்டுத் தம்மை இனிதான பாதையில் திருப்பிக் கொள்ளாமல்; வாய் உணர்வின் மாக்கள் = மனிதம் கொன்று உணவாய்த் தின்று உலவும் மாக்கள்; அவியினும் வாழினும் என் = அழிந்தால்தான் என்ன? தாமும் வாழ்கிறோம் என்று சொன்னால்தான் என்ன? இந்தச் சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை.

சான்றோர் பெருமக்கள் சொல்லும் அறக் கருத்துகளைக் கேட்டுத் தம்மை இனிதான பாதையில் திருப்பிக் கொள்ளாமல், மனிதம் கொன்று உணவாய்த் தின்று உலவும் மாக்கள் அழிந்தால்தான் என்ன? தாமும் வாழ்கிறோம் என்று சொன்னால்தான் என்ன? இந்த சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை.

 

சுய அறிவு இல்லையென்றால் பரவாயில்லை. சான்றோர் சொல் கேட்டும் திருந்தவில்லை என்றால் அவர்களும் மாக்களே! – இது மாக்களுக்கான இரண்டாம் குறிப்பு. இதுவே கடைசி வாய்ப்பு!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page