top of page
Search

உறுப்பொத்தல் ... 993, 79, 410, 12/05/2024

12/05/2024 (1163)

அன்பிற்கினியவர்களுக்கு:

பண்புடைமைக்கு அன்புடைமை, ஆன்ற குடி பிறத்தல் முக்கியம் என்றார் குறள் 992 இல்.

 

புறத்து உறுப்புகள் எல்லாம் அமைந்திருந்தும் அகத்தில் அன்பு இல்லை என்றால் அந்த உறுப்புகளால் பயன் இல்லை என்றார் குறள் 79 இல். காண்க 14/03/2021. மீள்பார்வைக்காக:

 

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு. – குறள் 79; -  அன்புடைமை

 

விறப்பு, உறப்பு, வெறுப்பு ஆகிய மூன்று சொல்களும் செறிவைக் குறிக்கும் என்கிறார் தொல்காப்பியர் பெருமான்.

 

விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. – சூத்திரம் 830; உரியியல், சொல்லதிகாரம், தொல்காப்பியம் – புலவர் வெற்றியழகனார் எளியவுரை.

 

சரி, இந்தச் சூத்திரம் எதற்கு என்கிறீர்களா? சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். வரும் குறளுக்குத் தேவைப்படுகிறது. இந்தக் குறளை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 18/01/2024. மீள்பார்வைக்காக:

 

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. – 993; - பண்புடைமை

 

வெறுத்தக்க = செறியத்தக்க;

உறுப்புகள் எல்லாம் ஒத்திருப்பதனாலேயே மக்கள் எல்லாம் ஒத்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள்; அவர்களிடம் செறிவான நல்ல பண்புகள் ஒத்து இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை மக்கள் என்று அழைக்கலாம்.

 

செறிவான பண்புகள் இருந்தால் மனிதன். இதைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால்? காண்க 25/10/2021. மீள்பார்வைக்காக:

 

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர். - 410; - கல்லாமை

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page