08/07/2023 (856)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
உல் – உல்கு – உலகு.
உலகு என்ற சொல்லுக்கு உருண்டை (sphere) என்று பொருள். இதுவே நீண்டு உர்ல்ட் (world) ஆகியது என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உலகம் உருண்டையானது என்ற கருத்து தொன்றுதொட்டு தமிழ் மரபில் இருந்து வந்துள்ளது!
உலகத்தை ஞாலம் என்றும் அழைக்கிறோம். ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். இந்த உலகமும் பால்வெளியில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொங்கிக் கொண்டுதான் உள்ளது. தமிழ் சொல்கள் அனைத்தும் பொருள் குறித்தனவே!
உல்கு என்றால் உழண்டு கொண்டிருக்கும் என்ற பொருளும் எடுக்கலாம். ‘உழண்டு கொண்டு’ என்றால் ‘ஓரிடத்தில் இருந்து வேறோரு இடத்திற்கு செல்வதும் வருவதுமாக இருக்கும்’ என்று பொருள் சொல்லலாம்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பொருள்கள் சென்றாலோ அல்லது வந்தாலோ (Import – Export) சுங்கத் தீர்வை என்ற வரி வசூலிக்கப்படுகிறது. அது அந்த நாட்டின் உற்பத்தி அந்த நாட்டுக்கு நேரடியாகப் பயன்படாமையாலும், இறக்குமதி செய்யும் நாட்டில் தங்கள் வளங்களைப் பெருக்காததாலும் இரு வழிகளிலும் வரி வசூலிக்கப்படுகிறது. இதற்கும் விதி விலக்குகள் உண்டு!
சரி, இப்போது என்ன அதற்கு என்கிறீர்களா?
ஒரு அரசிற்கு நிதி ஆதாரங்கள் எவ்வாறு அமையும் என்பதுதான் இன்றைய செய்தி.
நேர்முக வரி (Direct taxes) என்பது நாம் இருக்கும் நாட்டின் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாரிப்பதால் அதற்காக அந்த அரசிற்குச் செலுத்துவது.
ஆறில் ஒரு பங்கு வருவாயில் வரி செலுத்த வேண்டும் என்று பண்டைய இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன!
உல்கு என்றால் இறக்குமதி ஏற்றுமதிக்காக பொருள்களின் மேல் போடப்படும் வரி! இது மறைமுக வரி (Indirect taxes) எனலாம். இது மட்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது!
பகைவர்களின் சொத்துகளும் (Enemy Properties) அரசிற்கே சொந்தம். நம் நாட்டிலும் “பகைவர் சொத்து சட்டம் 1968” (Enemy Property Act – 1968) என்ற சட்டம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் சொத்துகளை ஏதேனும் ஒரு வகையில் பகைவர்கள் வாங்கியிருந்தால் அதை நம் அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம்.
"பகைவர் சொத்து" என்பது அரசாங்கத்தால் "எதிரிகளாக" கருதப்படும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் உடைமைகளைக் குறிக்கிறது.
நமது இந்தியாவைப் பொறுத்தவரை, நம்முடன் போரில் ஈடுபட்ட, ஈடுபட்டுள்ள நாட்டின் குடிமக்கள் அல்லது நம் நாட்டிற்கு விரோதமாக, நம் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் சொத்துகள்.
நம் நாட்டில் இருக்கும் பகைவர்களின் சொத்துப் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும். இந்தச் சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடிகளாக இருக்கலாமாம். இதில் அசையும் அசையா சொத்துகளும் அடங்கும்.
2023 June மாதத் தகவலின்படி எதிரிகளின் அசையும் சொத்துகளை விற்ற வகையில் ரூபாய் மூவாயிரத்து நானூறு கோடி அரசிற்கு வருவாயாக வந்துள்ளதாம்! மேலும் இந்த விற்பனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நம் அரசு முயன்று கொண்டுள்ளது.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.” --- குறள் 756; அதிகாரம் – பொருள் செயல்வகை
உறு பொருளும் = அரசிற்கு நேரடியாக வரும் வரி வருவாய்களும்; உல்கு பொருளும் = மறைமுகமாகக் கிடைக்கும் சுங்க வரி முதலான வரி வருவாய்களும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் = தமது நாட்டின் பகைவர்களின் சொத்துகளும்; வேந்தன் பொருள் = அரசினுடையப் பொருள்களாகும்.
அரசிற்கு நேரடியாக வரும் வரி வருவாய்களும் மறைமுகமாகக் கிடைக்கும் சுங்க வரி முதலான வரி வருவாய்களும் பகைவர்களின் சொத்துகளும் அரசினுடையப் பொருள்களாகும்.
“உறு பொருள்” என்பதற்கு பரிமேலழகப் பெருமான் தானாகவே அரசிற்கு வந்துவிடும் உரிமை கோரப்படாதப் பொருள்கள் என்கிறார்.
ஒரு பொருளை மறைத்து வைத்தவர் இறந்து போக, அதனால் அது நீண்டகாலம் நிலத்தின் அடியில் புதையலாகக் கிடக்கும். அத்தகைய புதையல்களும், வாரிசுகள் இல்லாமல் போகும் சொத்துகளும் உறுபொருள் என்று மேலும் விரிக்கிறார். மேலும் உறுபொருள் என்பது ஆறில் ஒரு பங்கான வரியைக் குறிக்காது என்றும் சொல்கிறார் பரிமேலழகப் பெருமான்.
புலவர் நன்னன், புலவர் குழந்தை போன்ற பெருமக்களும் இவ்வாறே உரை செய்துள்ளார்கள்.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார், மூதறிஞர் மு.வரதராசனார் போன்ற பெருமக்கள் உறுபொருளுக்கு இறை, வரி என்று பொருள் சொல்கிறார்கள்.
எனவே, உறுபொருள் என்பதற்கு உரிமைக் கோரப்படாதப் பொருள்கள் என்றும் நேரடி வரி என்றும் குறளுக்கு உரைகள் உள.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti