13/06/2023 (831)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒரு நாடு என்றால் அது வெறும் நிலப்பரப்பல்ல. அதில் அரசிற்கும், வாழும் மக்களுக்கும் அறவழியில் வளங்களைப் பெருக்கும் வகை இருக்க வேண்டும் என்றார் முதல் குறளில். மேலும், அந்த நாடானது, எல்லாரும் விரும்பும் வகையிலும், கேடுகள் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று இரண்டாம் குறளில் சொன்னார்.
மூன்றாம் குறளில், அந்த நாடு, பிற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்களுக்கும் புகலிடமாக இருக்க வேண்டும் என்றார். அந்தச் சுமையை ஏற்கும் விதமாக, அந்நாட்டு மக்கள் அரசிற்கு மனமுவந்து வரிகளைச் செலுத்தும்விதமாக வளத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில், எதெல்லாம் இருக்கக் கூடாது என்று அடுத்துவரும் குறள்களில் சொல்கிறார். முதலாவதாக, மக்களையும், மாக்களையும் வருத்தும் பசி இருக்கக் கூடாதாம். இரண்டாவதாக, இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் நீங்காத நோய்கள் இருக்கக் கூடாதாம். அது மட்டுமல்லாமல், அந்த நாட்டை அழித்து விடுவோம் என்று சொல்லக்கூடிய வெளிப் பகைகள் இல்லாமலும் இருக்க வேண்டுமாம்.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.” --- குறள் 734; அதிகாரம் – நாடு
உறுபசியும் = மிகுந்த பசியும்; ஓவாப் பிணியும் = நீங்காத நோய்களும்; செறுபகையும் = வெளியே இருந்து அழிக்கத் துடிக்கும் பகைகளும்; சேராது இயல்வது நாடு = இல்லாமல் இனிதே இருப்பது நாடு.
மிகுந்த பசியும், நீங்காத நோய்களும், வெளியே இருந்து அழிக்கத் துடிக்கும் பகைகளும் இல்லாமல் இனிதே இருப்பது நாடு.
மேலும் தொடர்கிறார். கடும் வெள்ளத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது. அதில் துடுப்பு போடுபவர்கள், ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாகத் துடுப்பு போடுகிறார்கள். சிலர், நாங்க அப்பவே சொன்னோம், வேணும், இன்னும் நல்லா வேணும் என்று உட்பகையை உமிழ்ந்து கொண்டுள்ளனர். அந்த மூலையில் சிலர், தங்கள் கைகளில் கிடைத்ததைக் கொண்டு, அந்தப் படகிற்கு, யாரும் அறியா வண்ணம், சேதாரத்தைச் செய்து கொண்டுள்ளனர். இப்படி ஒரு படகு சிக்கிக் கொண்டிருந்தால் அது கரை சேருமா?
“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.” --- குறள் 735; அதிகாரம் - நாடு
பல்குழுவும் = வேற்றுமையில் ஒற்றுமையைக் காணாது, பிரிந்து, பிரிந்து செயல்படும் குழுக்களும்; பாழ்செய்யும் உட்பகையும் = உடன் பிறந்தே கொல்லும் வியாதிகள்போல உடனிருந்தே கொல்லும் உட் பகையும்; வேந்தலைக்கும் கொல் குறும்பும் = அரசை அலைக்கழிக்கும், அழித்துவிட வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கும் குள்ள நரிக் கூட்டங்களும்; இல்லது நாடு = இல்லாமல் இருப்பதே நாடு.
வேற்றுமையில் ஒற்றுமையைக் காணாது, பிரிந்து, பிரிந்து செயல்படும் குழுக்களும், உடன் பிறந்தே கொல்லும் வியாதிகள்போல உடனிருந்தே கொல்லும் உட் பகையும், அரசை அலைக்கழிக்கும், அழித்துவிட வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கும் குள்ள நரிக் கூட்டங்களும் இல்லாமல் இருப்பதே நாடு.
“பல்குழுவும்” என்பதற்கு பரிமேலழகப் பெருமான், பதிமூண்றாம் நூற்றாண்டில், சொன்ன விளக்கம் என்னெவென்றால்:
“சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமையால் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்” என்கிறார்.
அதாவது, சாதியாலும் மதத்தாலும் பிரிந்து நிற்கும் கூட்டங்கள் நாட்டுக்கு வேண்டத் தகாதது என்கிறார். பல்வேறு வகைகளில் மனித குலம் வளர்ந்துவிட்ட போதிலும், இந்தக் கொடுமைகள் இன்னும் தீர்ந்தப்பாடில்லை!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
politicians do these divisions for their selfish motives