08/06/2022 (467)
பெண்வழிச் சேறலுக்கு அடுத்து ‘வரைவின் மகளிர் ‘ என்ற அதிகாரம், 92ஆவது அதிகாரமாக பொருட்பாலில், அங்கவியலில் அமைந்துள்ளது.
வரைவின் மகளிர் என்பது வரைவு+இல்+மகளிர் என்று பிரியும். வரைவு என்றால் வரம்பு, ஒர் ஒழுங்கமைப்பு என்று பொருள்தரும். வரைவு எனும் சொல் திருமணத்திற்கும் ஆகி வரும்.
வரைவு இல் மகளிர் என்றால் ஒரு ஒழுங்கில் இல்லாத மகளிர் அதாவது விலை மகளிர், தற்காலச் சொல்லாடலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள்.
நாம் தீநட்பு என்னும் அதிகாரத்தில் (82ஆவது) ஒரு குறளைப் பார்த்தபோது தீநட்பை சாடும்போது “பெறுவது கொள்வார்” என்று விலை மகளிரை நம் பேராசான் குறித்ததைக் கண்டோம். காண்க 06/01/2022 (315).
மீள்பார்வைக்காக:
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.” ---குறள் 813; அதிகாரம் – தீ நட்பு
கிடைப்பதை அளந்து பார்க்கும் நட்பும்; நீ என்ன வேண்டுமானால் கெட்டுப் போ, எனக்கு வேண்டியது பணம் என்று இயங்கும் விலைமகளிரும்; கள்வர்களும் ஒன்று.
விலைமகளிரிலும் இருவகை உண்டு. ஒன்று பஞ்சத்துக்கு; மற்றொன்று பரம்பரைக்கு.
மேற் சொன்ன குறளைப் பற்றி சிந்திக்கும் போது கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது என்ற ஒரு நூலைப் பற்றியும் பார்த்தோம். அதாவது, விலை மகளிரைச் சுட்டும் போது:
அப்பன் வருவான் , அவன் பின்னே அவன் மகனும் கூட உன்னுடன் கூடி உல்லாசம் அனுபவிக்க வருவான். தப்பான உறவு முறை என்று தள்ளி விடாதே. 'இது நமது தொழில்' என்று விலை மகளிராக இருக்கும் ஒரு அம்மா தன் மகளுக்கு சொல்வது போல ஒரு இடம் இருக்கும்.
“… பல் விழுந்த கூனற் கிழவன் கொடுக்கும் பணயமதில்
நானக் குழலே! நரை உண்டோ ? - மானமின்றி
அப்பன் வருவான் அவன் பின் மகன் வருவான் தப்புமுறை என்று தள்ளாதே! …”
வள்ளுவப் பெருமான் விலை மகளிரைச் சுட்டும் போது இது போன்று இருக்கும் விலைமகளிரைத்தான் சுட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்று இருக்கும் விலைமகளிரின் பண்புகளை மேலும் விரித்து அவர்களைத் தேடும், ஆண் மகன்களுக்கு எந்த விலக்கும் இல்லை என்பதால் ஆண் மகன்களைச் சாடுகின்றார், நெறிப் படுத்துகின்றார்.
நாளை தொடர்வோம். நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments