06/01/2022 (315)
தனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் நபரை நண்பராகப் பெற்றால் என்? விட்டால் என்? என்று குறள் 812ல் நம்மைச் சிந்திக்க வைத்த நம் பேராசான் அடுத்து தொடர்கிறார்.
அந்த மாதிரி நபர்கள் எப்போதும் அவர்களுக்கு ஏதாவது கிடைக்கனும்ன்னு மட்டுமல்ல, கிடைத்தை அளந்தும் பார்ப்பாங்களாம். இது எப்படி இருக்கு?
‘தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடிச்சு பார்த்தானாம்’ என்ற பழமொழி போல இருக்கு என்றும் நாம் சிந்தித்தோம். அந்த மாதிரி, நட்புக்குள் சீர்தூக்கிப் பார்ப்பது எவ்வளவு இழிவு என்ற ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதிலும் சொல்கிறார் நம் பெருந்தகை.
அது எப்படி இருக்கு என்றால், அன்பைக் கொள்ளாமல் பணத்தை மட்டும் எண்ணும் விலைமகளிர் போலவும், எனக்கு தேவை நான் திருடி எடுத்துக் கொள்கிறேன் என்று திருடும் கள்வரைப் போலவும் இருக்காம்.
விலைமகளிரிலும் இருவகை உண்டு. ஒன்று பஞ்சத்துக்கு; மற்றொன்று பரம்பரைக்கு.
“கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது” என்ற ஒரு நூல் இருக்கிறது. அதன் ஆசிரியர் சுப்ர தீபக் கவிராயர். காலம் கி.பி. 1800. (விறலி விடு தூது என்னவென்று விரித்தால் விரியும் போல இருக்கிறது – எனவே தவிர்க்கிறேன்.)
விலைமகளிராக இருக்கும் அம்மா தன் மகளுக்குச் சொல்வது இது:
“… பல் விழுந்த கூனற் கிழவன் கொடுக்கும் பணயமதில்
நானக் குழலே! நரை உண்டோ ? - மானமின்றி
அப்பன் வருவான் அவன் பின் மகன் வருவான் தப்புமுறை என்று தள்ளாதே! …”
இது போன்று இருக்கும் விலைமகளிரைச் சுட்டுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். சரி, இது நிற்க
என்ன ரணமான உதாரணங்கள் பாருங்கள். ஆமாங்க அப்படித்தான் சொல்லியிருக்கார்.
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.” ---குறள் 813; அதிகாரம் – தீ நட்பு
உறுவது சீர்தூக்கும் நட்பும் = தனக்கு கிடைப்பதே தப்பு, அதிலேயும் அதையும் அளந்து பார்க்கும் நட்பும்; பெறுவது கொள்வாரும் = (நீ என்ன வேண்டுமானால் கெட்டுப் போ) எனக்கு வேண்டியது பணம் என்று இயங்கும் விலைமகளிரும்; கள்வரும் நேர் = கள்வர்களும் ஒன்று
தீ நட்பைத் தொட்டு விடாதே. தொட்டு விட்டால் தொடர்ந்து விடாதே என்கிறார் நம் பேராசான். என்ன ஒரு அக்கறை நம் மேல்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
I am just reminded of good old tamil film MR Radha starring "Iratthakkanner"
Comment from my friend Arumugam அப்பன் வருவான் அவன்பின் மகன் வருவான்"
அப்பனும் மகனும் ஒரு விலைமகளிடம் ஒருவர்பின் மற்றொருவர் அவளிடம் இன்பத்தை அனுபவிக்க வெட்கமில்லாமல் வருகிறார்களாம்.அப்படிப்பட்ட சமயத்தில் முறையைப் பற்றி கவலைப்படாமல் நீ இரண்டுபேரையும் அனுமதி என்று ஒரு தாய் தன்மகளுக்கு அறிவுரை கூறுகிறாள். அவளுக்கு வேண்டிய பணம் வந்தால் போதும். அதுபோன்ற நண்பர்களை விட்டுவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
விறலி,பாணர் போன்ற சொற்கள் பழந்தமிழ் பாடல்களில் காணப்படுவன.பாணர் என்பவர் வாத்தியகருவிகளுடன் ஊர்ஊராக சென்று மன்னர்கள் மற்றும் செல்வந்தர் முன் ஆடி,பாடி அவர்களை மகிழ்வித்து பரிசு பெறுபவர்கள். பாணர் ஆண்பால். விறலி பெண்பால். பெண்கள் விறலை அசைத்து பாவத்திற்கேற்ப நடனம் ஆடியதால் விறலி என்றழைக்கப்பட்டனர்.