13/07/2023 (861)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அனுபவம் (experience) என்பது மிகவும் முக்கியம். நமது மைல் கல்களை (reference points) நகர்த்தி வைக்கும். அது முன்னும் இருக்கலாம், பின்னும் இருக்கலாம். எப்படி இருந்தாலும், நாம் தொடர, அனுபவம் பல புள்ளிகளை உருவாக்கிக் கொடுக்கும்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் ...
ஆகையினால் பயிற்சி என்பது எப்போதும் முக்கியம், அவசியம், தேவையானதும் கூட!
பல்வேறு கால கட்டங்களில் நமது செயல்திறன் எவ்வாறு வெளிப்படுகிறது, அந்த வெளிப்பாட்டால் நம்முள் நிகழும் மாற்றங்கள் எப்படி நம்மை மேலும் மெருகூட்டுகிறது என்பது நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் புரியும்.
களம் பல கண்டவர்கள் அஞ்சுவது அரிது. அதிலும் நெருக்கடியான களங்களைக் கண்டவர்கள் எதற்கும் துணிந்து நிற்பர்.
சரி, இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? நம் பேராசான் சொல்கிறார்; படை என்றால் அது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அது வல்லவர்கள், நெருக்கடியான களங்களில் நேர் நின்று வெற்றி பல கண்டவர்கள், பெரும் சோதனை என்றாலும் அசராதவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் படை என்கிறார்.
இது நிறுவனங்களுக்கும் பொருந்தும். உயர் பதவியில் அமர வைக்கத் தேவையான தகுதியும் மேலே சொன்னதுதான்! அனுபவம் இருக்க வேண்டும்; சோதனைகளுக்கு அஞ்சாமல் எதிர்த்துநின்று வழி நடத்தக் கூடிய துணிவும் திறமையும், பார்வையும் இருக்க வேண்டும். பிறகென்ன வெற்றிதான்!
“உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.” --- குறள் 762; அதிகாரம் – படை மாட்சி
உலைவிடம் = சோதனையான களம்; ஊறு = இன்னல்கள்; வன்கண் = பேராற்றல்; தொலைவிடத்துத் தொல்படை = கடுமையானக் களத்தை வென்ற அனுபவம் மிக்கப் படை;
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் = ஒரு சோதனை என்று வரும்போது அதனால் வரும் இன்னல்களுக்காக அஞ்சாத, அசராத பேராற்றல்; தொலை விடத்துத் தொல் படைக்கு அல்லால் அரிது = தம்மை அழித்துவிடுமோ என்பது போன்ற கடுமையான களங்கள் பல கண்டுத் தேர்ந்தவர்களுக்கல்லால் வாய்க்காது.
ஒரு சோதனை என்று வரும்போது அதனால் வரும் இன்னல்களுக்காக அஞ்சாத, அசராத பேராற்றல், தம்மை அழித்துவிடுமோ என்பது போன்ற கடுமையான களங்கள் பல கண்டுத் தேர்ந்தவர்களுக்கல்லால் வாய்க்காது.
எனவே, அனுபவசாலிகளைப் போற்றி தமது படையாக பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மலிவாகக் கிடைக்கிறதே என்று எலிக்கூட்டங்களைப் படையாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார். நாளைப் பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments