22/02/2022 (361)
February 21, உலக தாய்மொழி தினமாக 2000 ஆண்டு முதல் கொண்டாடப் படுகிறது. இது வங்க தேசத்து (BANGLADESH) முயற்சியாகும். 1947ல் சுதந்திரம் அடைந்த பாக்கிஸ்தானம் (Pakistan), நிலப் பரப்பில் மேற்கு என்றும் கிழக்கு என்றும் இரு தனித்தனி பகுதிகளாக இருந்ததது.
கிழக்கு பாக்கிஸ்தானம் (தற்போதைய பங்களாதேசம்) பல அடக்கு முறைகளை, மேற்கு பாக்கிஸ்தானத்தினால் (தற்போதைய பாக்கிஸ்தானம்) சந்தித்தது. கிழக்கு வங்க மக்களின் மொழியாக வங்க மொழியிருந்தது. அவர்களின் மீது உருது மொழி திணிக்கப்பட்டது. 1952ல் மொழிப் போராட்டம் வெடித்து அதில் வங்க தேசத்து மக்கள் நால்வர் மாண்டார்கள். அந்த நாள்தான் பிப்ரவரி 21, 1952. அப் போராட்டம் தான் விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. வங்க தேசத்து மக்கள், 1971 ஆம் ஆண்டு, இந்திய அரசின் ராணுவ உதவியுடன் தனி நாடு கண்டனர்.
வங்க மொழியைக் காக்க நான்கு இன்னுயிர்களை இழந்த செய்தியை உலக பன்னாட்டு (UN) சபையில் தெரிவிக்க அதன் அடிப்படையில் பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாளை (February 21) உலக தாய் மொழி நாளாக அறிவித்தது பன்னாட்டு சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO).
சரித்திரம் விசித்திரமானது.
1937 ல் இந்தி கட்டாயம் என்ற சட்டம் ஆளும் அரசினால் கொண்டு வரப்பட்டது. அதனால், தமிழகத்தில் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் உருவானது. அந்தப் போராட்டத்தில், 1939 ல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த நிலையில், தாளமுத்து, நடராசன் இருவரும் மரணிக்கிறார்கள். தொடர்ந்து பல உயிர் இழப்புகள். அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சி பதவி விலகுகிறது. ஆளுனரின் மேற்பார்வையில் அரசு அமைகிறது. அப்போது ஆளுனராக இருந்த எர்ஸ்கின் என்பார், இந்தி திணிப்புச் சட்டத்தை 1940ல் திரும்பப் பெறுகிறார்.
அது எந்த நாள் என்றால் அதுவும் இதே February 21 தான். வங்க தேச மொழிப் போராட்த்திற்கு முன், அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது.
எனவே, இந்த பிப்ரவரி 21 என்பது தமிழ் மொழிக்கு மிகவும் நெருக்கமானது. இந்த தினம், உலக தாய் மொழி தினமாக இருப்பது மிகவும் பொருத்தமானது. இதுதான், சரித்திரத்தின் விசித்திரம்.
யூதர்கள், அதாவது JEWS என்கிறோமே அவர்கள் இந்த February 21 ஐ உலக குழந்தைகள் மொழி நாள் என்றுதான் கொண்டாட வேண்டும். ஏன் தெரியுமா?
யூதர்களைப் பொறுத்த வரையில் எல்லாமே வித்தியாசம்தான். ஒவ்வொரு வீடுகளாக வாங்கி நாட்டினை உருவாக்கினார்கள்!
எபிரேய மொழி, (Hebrew) வழக்கு ஒழிந்த நிலையில் அவர்கள் அதை மீட்கும் முயற்சியில் முதலில் அதை குழந்தைகளுக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்து, அக் குழந்தைகள் மூலமாக தாய், தந்தைகள் கற்றுக் கொண்டனர். இப்போது சொல்லுங்கள். நமக்கு எல்லாம் தாய் மொழி என்றால் அவர்களுக்கு குழந்தைகள் மொழி தானே?
அவர்கள், தங்கள் மொழி மீண்டெழ, கடும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். கற்பது முதல் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தும் அவர்கள் தாய் மொழியான எபிரேயத்தில்தான். தற்போது, அதிக அளவில் நோபல் பரிசுகளையும் தட்டிச் செல்கிறார்கள்.
தாய் மொழிகளின் பெருமை தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது.
உலகில் உள்ள மொழிகள் 7000 க்கும் மேல். இந்தியாவில், 1961ல் எடுக்கப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 1600 மொழிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அது தற்போது 700 என்ற அளவில் சுருங்கி இருக்கும் என்றும் கணக்கிடுகிறார்கள். அந்த 700 மொழிகளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 மட்டும்தான்.
மேலும் மொழி அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், இன்னும் ஒரு நூறு, இருநூறு ஆண்டுகளில் நம் நாட்டில், இரு மொழிகள்தான் இருக்குமாம். நம் குடும்பங்களே அதற்கு உதாரணம். தமிழ் படிக்கத் தெரியாத குழந்தைகள்தான் ஏராளாம்.
சிந்திப்போமா? சிதறவிடுவோமா?
சரித்திரம் விசித்திரமானது. நம்புவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு. 1: நீண்ட பதிவாகிவிட்டது. இன்னும் பல செய்திகளை என் ஆசிரியர் சொன்னார், காலத்தின் அருமை கருதி சுருக்கிவிட்டேன். சமயம் வாய்க்கும் போது தொடருவோம்.
பி.கு. 2: குறளை நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.
பி.கு. 3: சரித்திரம் கற்காமல் சரியான திறம் வராது என்றும் சொன்னார் என் ஆசிரியர்.
Thank you so much. well researched information on the `உலக தாய்மொழி தினம.