24/04/2024 (1145)
அன்பிற்கினியவர்களுக்கு:
கல்லாதவரும் நனி நல்லர் என்றார் குறள் 403 இல். காண்க 09/02/2021.
மேலும் தொடர்கிறார்.
நன்றாகக் கற்றுத் தெளிவடையாதவரின் சொல்லில் உண்மை இருந்தாலும் மதிப்பிருக்காது. அதனை யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். சான்றுகள் கேட்பார்கள்; நிறுவச் சொல்வார்கள்! இவை இயலாத போழ்து கடந்து செல்வார்கள். அவ்வளவே.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்றார் நம் பேராசான் குறள் 423 இல். காண்க 29/04/2023. இந்தக் குறளுக்கு உரைக் குறிப்பாகப் பரிமேலழகப் பெருமான் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்:
“குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார்.” என்று சொல்கிறார்.
ஒட்பம், அறிவு என்று இரு சொல்கள் உள்ளன.
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு. – 425; - அறிவுடைமை
உலகம் தழீஇயது ஒட்பம் = உலக வழக்கைத் தழுவி நிற்பது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு = அவ்வுலக வழக்கின் செல்வாக்கால் பாதிக்கப்படாமல் இருப்பது அறிவு. அஃதாவது, உலக வழக்கினால் ஒரு உண்மையை ஏற்றுக் கொள்வதோ, தவிர்த்து விடுதலோ இல்லாமல் இருப்பது அறிவு.
உலக வழக்கைத் தழுவி நிற்பது ஒட்பம். அவ்வுலக வழக்கின் செல்வாக்கால் பாதிக்கப்படாமல் இருப்பது அறிவு. அஃதாவது, உலக வழக்கினால் ஒரு உண்மையை ஏற்றுக் கொள்வதோ, தவிர்த்து விடுதலோ இல்லாமல் இருப்பது அறிவு.
ஒட்பம் என்பதும் ஒரு வித அறிவுதான். ஆனால், அது உண்மையான அறிவாகாது. அது உயிர் பிழைக்க ஒரு வித்தையாக இருக்கலாம்!
“ஏரல் எழுத்து” என்று ஒரு சொலவடை (vocabulary) உண்டு. ஏரல் என்றால் நத்தை. நத்தை கடலின் மணல் வெளியில் தன்மட்டில் ஊர்ந்து செல்லும்போது மணலில் கோடுகள் விழும். அந்தக் கோடுகள் தற்செயலாக ‘இ’ என்பது போல விழுந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம், அடடா, இந்த நத்தை தமிழறிந்த நத்தை என்று சொல்வதில்லை!
அது போல, கல்லாதவனின் கருத்து உலக வழக்கிற்கு ஒட்டி ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும், அவனை யாராவது கற்றவன் என்று ஏற்றுக் கொள்வார்களா? ஏரல் எழுத்துப் போல என்பார்கள்!
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். – 404; - கல்லாமை
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் = அறிவுசார் நூல்களைக் கல்லாதவனின் உலக வழக்கை ஒட்டிய கருத்துகள் சில சமயம் மிக நன்றாக இருப்பினும்; அறிவு உடையார் கொள்ளார் = கற்றறிந்தவர்கள், அந்தக் கருத்துகளை அவனின் உண்மையான அறிவு என்று எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அறிவுசார் நூல்களைக் கல்லாதவனின், உலக வழக்கை ஒட்டிய கருத்துகள், சில சமயம் மிக நன்றாக இருப்பினும், கற்றறிந்தவர்கள், அந்தக் கருத்துகளை அவனின் உண்மையான அறிவு என்று எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஏரல் எழுத்து என்றுதான் எடுத்துக் கொள்வார்கள்.
கற்க வேண்டும்; கற்பதனையும் நன்றாகக் கற்க வேண்டும்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments