16/08/2022 (535)
“வெறுக்கை” என்றால் ‘ஆதாரமாக இருப்பது’ என்று பொருள். மிகுதி, அடிப்படை, விழுப்பொருள், செல்வம் என்றும் பொருள்படும்.
ஒருவன் வாழும் காலத்து தன் குடியின் மானம் காத்து பெருமையோடு, ஓளியோடு இருப்பதுதான் அடிப்படை. அவன் வாழும் வாழ்க்கைக்கு ஆதாரப் பொருளும் அதுதான்.
அவ்வாறு இல்லாமல், குடியின் மானம் கெட, பெருமை குலைய வாழ்வது என்பது ஒரு இழி நிலை.
இதை நம் பேராசான் இவ்வாறு சொல்கிறார்:
“ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல்.” --- குறள் 971; அதிகாரம் – பெருமை
உள்ள வெறுக்கை = ஊக்க மிகுதி; ஒளி = பெருமை; ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை = ஒருவற்கு பெருமை என்பது தன் குடியை முன்னேற்றுவோம் என்ற ஊக்க மிகுதியே;
இளி ஒருவற்கு அஃது இறந்து வாழ்தும் எனல் = அவ்வாறில்லாமல்கூட வாழலாம் என்பது ஒருவற்கு இழிவானது.
ஒருவற்கு பெருமை என்பது தன் குடியை முன்னேற்றுவோம் என்ற ஊக்க மிகுதியே; குடி எக்கேடு கெட்டுப் போனா என்ன, என்று வாழ்வது இழிவானது.
இதே வகையில் மேலும் ஒரு குறள் இருக்கு. ஊக்கமுடைமை என்னும் (60 ஆவது) அதிகாரத்தில்.
அதாவது, ஒருவன் அறிவாற்றல் மிக்கோன் என்பதற்கு அடிப்படை ஊக்க மிகுதியே. அந்த ஊக்கம் இல்லாவிட்டால், தன் முனைப்பு இல்லாவிட்டால் அவர்களை மக்களாகவே கருத மாட்டார்கள், மரமாகவும் கருத மாட்டார்கள்.
“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு.” --- குறள் 600; அதிகாரம் – ஊக்கமுடைமை
உரம் = அறிவாற்றல்; உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை = அறிவாற்றலுக்கு அடிப்படை ஊக்க மிகுதியே; அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு = அவ்வாறு இல்லாமல் இருந்தால் அவர்கள் மரமும் அல்ல, மக்களும் அல்ல.
மரமானது ஒரு இடத்திலேயே நின்றிருந்தாலும் பல வகை பயன்களை வழங்குகிறது. ஆகையால், ஊக்கமில்லாதவனை மரம் என்றும் சொல்ல இயலாது.
அவனுக்கு அறிவைக் கொடுத்தது எதற்காக என்பது புரியாமல் இருந்தால் அவன் மனிதனாகவும் கருத இயலாது என்கிறார் நம் பேராசான்.
சில அறிஞர் பெருமக்கள் ஊக்கமில்லாதவன் மரம் போன்றவன், அவன் மனிதனே அல்ல என்று பொருள் காண்கிறார்கள்.
பரிமேலழகப் பெருமான் என்ன கூறுகிறார் என்றால் மரங்களுள் பயனற்ற மரங்களும் இருக்கும் வடிவத்தில் நல்ல பயன் தரும் மரம் போல இருக்கும். அது போல பயன் தரும் மக்கள் வடிவத்தில் இருந்தாலும் அவர்கள் பயன் தரா மக்க(ரங்க)ளே என்கிறார்.
இதைக் கூறிவிட்டு, நல்ல மரமானது கனிகளைத் தரும், கோயில்கள், வீடு, கப்பல் போன்றவை கட்ட பயன்படும். அதனால், ஊக்கமில்லாதவன் பயன் தரா மரங்களுக்கு ஒப்பானவன் என்றார்.
அதனாலே, மரம் மாதிரி நிற்காதேடான்னு யாரையும் திட்டாதீங்க. வேண்டும் என்றால் பயன் தரா மரம் மாதிரி இருக்காதே என்று வேண்டுமானால் சொல்லுங்க. பயன் தரா மரங்களை கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், பயன் தரா மக்களைக் கண்டு பிடிப்பது கடினாமா என்ன?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments