28/09/2022 (577)
“ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.” --- குறள் 1088; அதிகாரம் -தகை அணங்கு உறுத்தல்
மேற்கண்ட குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க: 02/09/2022 (552).
ஓண்ணுதல் = ஓள் நுதல் = ஓளி பொருந்திய நெற்றி = அழகான நெற்றி/முகம்.
அதைப் பார்த்த உடன் என் வீரம் எல்லாம் எங்கேயோ போய்விடுகிறது என்பதைப் போல் அமைந்தக் குறள் அது.
அவள் உடலின் ஒவ்வொரு அணுக்களுமே (cell) அவனிடம் பேசுவதுபோல்தான் அவனுக்குத் தோன்றுகிறது.
ஆனால், அவனை மிகவும் மிரள வைப்பது அவளின் கண்கள்தான். அந்தக் கண்களில்தான் எவ்வளவு குறிப்புகள்!
அவள் ஒரு “ஒள் அமர் கண்ணாள்”. அதாவது ‘ஓளி பொருந்திய கண்ணிணாய்’ என்று மகாகவி பாரதி சொன்னாரே அதுபோல!
அமர் என்றால் பொருந்திய என்று பொருள். அமர் என்றால் போர் என்ற பொருளும் உண்டு. அந்தக் கண்கள் சமயத்தில் சமரும் செய்கின்றன.
இப்படியாக அவளைக் குறித்தும், அவளின் காதலைக் குறித்தும் அவன் என்ணிக்கொண்டுள்ளான். அவனுக்கு இப்போது மீண்டும் ஒரு சந்தேகம்!
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி …
அவளைக் கண்ட நாள் முதல் எப்போதாவது நாம் அவளை மறந்திருந்தோமா என்று எண்ணுகிறான். அது எப்படி? மறத்தலையே மறந்துவிட்டேனே!
சுக முனி என்று ஒருவர் இருந்தாராம் அவருக்கு எப்போதும் சிவப் பரம்பொருளின் நினைப்பாகவே இருப்பாராம். அது போல அவனுக்கு எப்போதும் அவளின் நினைவாகவே இருக்கிறதாம்!
சிவ சிவா! இல்லை, இல்லை. கண்ணம்மா, கண்ணம்மா…
“…மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்
எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…” மகாகவி பாரதியார்
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள் அமர்க் கண்ணாள் குணம்.” --- குறள் 1125; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
ஒளி பொருந்திய அந்தக் கண்களை உடையவளைக் கண்ட நாள் முதலாய் அவளை மறந்தால் அல்லவோ நினைப்பேன். மறத்தலையே மறந்து விட்டேனடி.
உள்ளுதல் = நினைத்தல்; ஒள் அமர்க் கண்ணாள் குணம் = ஒளி பொருந்திய அந்தக் கண்களை உடையவளைக் கண்ட நாள் முதலாய் அவளை
மறப்பின் உள்ளுவன் யான் = மறந்தால் அல்லவோ நினைப்பேன்;
மறப்பறியேன் = மறத்தலையே மறந்து விட்டேனடி;
மன் = ஒழியிசை எச்சம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments