top of page
Search

உள்ளுவன் மன்யான் ... 1184, 1185, 03/03/2024

03/03/2024 (1093)

அன்பிற்கினியவர்களுக்கு:

 

கண் விதுப்பு அழிதல் அதிகாரத்தில் கண்தான் காரணமாக இருக்கும் என்று அதைக் கடிந்து கொண்டாள்.

 

என் அழகை எடுத்துக் கொண்டு பசலையைத் தந்தார்; என் நாணத்தை எடுத்துக் கொண்டு காம நோயைத் தந்தார் என்றவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை!

 

இவை இரண்டும் இயல்பாக நிகழ்பவை! ஒன்று வர மற்றொன்று போகும். அவ்வளவே. அது சரி பொழுதை எப்படிக் கழிப்பது? அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினாள்.

 

ஒரே போடாக போடுகிறாள். நான்தான் அவரைப் பிரியவே இல்லையே எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்கிறாள்?

 

தோழி: கொஞ்சம் முற்றிதான் போகிறதுபோல!

 

நான் அவரை மறந்தால்தானே பிரிவதற்கு? என் எண்ணமும், பேச்சும் அவரைக் குறித்தே இருக்கும்போது நான் எப்படி பிரிந்ததாகும்? இருப்பினும் கள்ளத்தனமாக இந்த பசலை என்னைப் படர்கிறது. அது இந்தப் பசலையின் வஞ்சனை என்கிறாள்.

 

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. – 1184; - பசப்புறு பருவரல்

 

யான் உள்ளுவன் = நான் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பது அவரைத் தவிர வேறில்லை;  உரைப்பது அவர் திறம் = என் வாயோ அவரைக் குறித்தே எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது நான் எப்படி அவரைப் பிரிந்ததாகும்; கள்ளம் பசப்பு = இங்கே குற்றவாளி என்னை வாட்டி வதைக்கும் கள்ளன் இந்தப் பசப்பேதான்; பிறவு, ஓ – அசை நிலை.

 

நான் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பது அவரைத் தவிர வேறில்லை. என் வாயோ அவரைக் குறித்தே எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது நான் எப்படி அவரைப் பிரிந்ததாகும். இங்கே குற்றவாளி என்னை வாட்டி வதைக்கும் கள்ளன் இந்தப் பசப்பேதான்.

 

தோழி: நான் அவரை ஒரு குற்றமும் சொல்லவில்லையே. நீ

தானே அவரைப் போகாமல் இருக்கச் சொல் என்றெல்லாம் கெஞ்சினாய். அவர் சென்றபின் என்னையும் அவரையும் தூற்றினாய். பின் உன் கண்கள்தாம் காரணம் என்றாய்! இப்போது குற்றம் இந்தப் பசலையின்  கள்ளம் என்கிறாய்!

 

அவள்: இல்லை, இல்லை நான் அவ்வாறும் சொல்லவில்லை.

தோழி: பின்?

 

அவள்: நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கும்போது அவரைச் சந்திபதும் பின்னர் சில நாள்கள் பிரிவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. அப்போதே, இந்தப் பசலை என்னைத் தாக்கும். இப்போது அவர் சற்று நீண்ட காலம் பிரிந்து இருக்கும்போது அந்தப் பசலை தாக்காதா என்ன? இது இரவு, பகல் போல அவ்வளவே!

 

தோழி: ங்கே…

 

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்

மேனி பசப்பூர் வது. – 1185; - பசப்புறு பருவரல்

 

எம் காதலர் உவக்காண் செல்வார் = முன்னர் நாங்கள் காதல் வழியில் திளைத்திருந்த போதும் எம் காதலர் பிரிந்து செல்வார்; என் மேனி பசப்பூர்வது இவக்காண் = என் மேனியில் இப்போது பசப்பு ஊர்வது போல அப்போதும் இருந்ததே.

 

முன்னர் நாங்கள் காதல் வழியில் திளைத்திருந்த போதும் எம் காதலர் பிரிந்து செல்வார். என் மேனியில் இப்போது பசப்பு ஊர்வது போல அப்போதும் இருந்ததே.

 

இஃது, இரவும் பகலும் போல! இதை அறியாமல் நீ என்னைக் கிண்டல் செய்கிறாய் என்கிறாள்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.






 

Comments


Post: Blog2_Post
bottom of page