23/02/2023 (721)
இந்த உலகத்தில், நாமும் ஒரளவிற்கு மதிக்கப்படும் ஆளாக இருக்கோம் என்ற செருக்கு, பெருமிதம் இருக்காதாம்!
யாருக்கு?
‘உள்ளம்’ இலாதவர்க்கு என்கிறார் நம் பேராசான்.
உள்ளம் என்றால் வேறு ஒன்றுமில்லை. ஊக்கம்தான்!
நம்மால் சிலருக்கோ, பலருக்கோ ஏதோ ஒரு வகையில் பயன் இருக்கனும் இல்லையா?
நம்மால் முடிந்ததைச் செய்யும் போது, நமக்கும் ஒரு மன நிறைவு இருக்கும். அதே சமயம், நம்மாலும், நாலு பேருக்கு உதவ முடிகிறதே எனும்போது, நம் மேலே, நமக்கே ஒரு மரியாதை வரத்தானேச் செய்யும். அதனால், அந்த மரியாதை வேண்டுமென்றால், அதற்குத் தேவை ஊக்கம் என்கிறார்.
“உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.” --- குறள் 598; அதிகாரம் – ஊக்கம் உடைமை
செருக்கு = சுயமதிப்பு; வள்ளியம் = வன்மை
உள்ளம் இலாதவர் = ஊக்கம் இல்லாதவர்கள்;
உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்= இந்த இமிழ்கடல் சூழ் உலகில் நாமும் கவனிக்கத் தக்கவன்தான் என்ற ஒரு சுயமதிப்பைப் பெறமாட்டார்.
ஊக்கம் இல்லாதவர்கள், இந்த இமிழ்கடல் சூழ் உலகில். நாமும் கவனிக்கத் தக்கவன்தான் என்ற ஒரு சுயமதிப்பைப் பெறமாட்டார்.
இமிழ் கடல் = இனிமையாக முழங்கும் கடல். இந்தச் சொல்லாடலை, நம் இளங்கோவடிகள் பெருமானார், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தியுள்ளார்.
ஐம்பெரும் காப்பியங்கள் என்பது: சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியவற்றைக் குறிக்கும். இந்த ஐந்தில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காலத்தில் முந்தியவை. கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என்று பலவாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே” ...” வரிகள் 165 – 170; காட்சிக் காதை, சிலப்பதிகாரம்
ஏற்பவர் = எதிர்ப்பவர்
இப்பாடலை விரித்தால் விரியும் என்றார் ஆசிரியர். பிறகு பார்க்கலாம் என்றார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Commenti