18/02/2023 (716)
இருந்தால் ஊக்கம் இருக்கனும் தம்பி; மற்றது எல்லாம் கணக்கில் வராது என்றார் முதல் குறளில். அதாவது, ‘உடையர் எனப்படுவது ஊக்கம்’ என்றார்.
அடுத்தக் குறளில், ஊக்கம் என்பதற்கு ‘உள்ளம்’ என்ற சொல்லைப் போடுகிறார். அதாவது, உள்ளுவதால் உள்ளம். உள்ளத் தூண்டுவது ஊக்கம். அதாவது, எண்ணம். உள்ளம் ஆகுபெயர்.
மனம், சொல், செயல் (மனசா, வாச்ச, கர்மனா) இதுதான் படிமுறை. எல்லாவற்றிர்க்கும் ஊக்கம்தான் முதல் காரணம்.
தத்துவார்தமாகப் பார்த்தால், உள்ளம் என்பதுதான் ஆன்மா. ஆன்மா என்பது வேறு ஒன்றுமல்ல, அதுதான் மனசாட்சி! என்று தத்துவவியலாளர்கள் சொல்கிறார்கள். மனசாட்சி இருந்தால் அவன்தான் மனசன். (மனசன் என்ற சொல்லை பாம்பன் சுவாமிகள் பயன்படுத்துகிறார்).
நம்மாளு: நல்ல மனசு இருக்கனும் ஐயா; வேற என்ன இருந்தும் என்ன பயன்?
இது நிற்க.
முதல் குறளில் (591ல்) வேறு எதுவும் கணக்கில் வராது என்றவர், அடுத்தக் குறளில் அடுத்தப் படிக்குச் செல்கிறார். மற்றது கணக்கில் மட்டுமல்ல தம்பி, மற்றவைகள் எல்லாம் காணாமலேப் போய்விடும் என்கிறார். இப்படித்தான் ஒரு ஒரு அடியாக மெல்ல நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்.
உடைமைகளை இரண்டாகப் பிரிக்கிறார். அகம் என்றும், புறம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அகம் என்பது உள்ளம்; புறம் என்பது ஏனையச் செல்வங்கள்.
“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.” --- குறள் 592; அதிகாரம் – ஊக்கம் உடைமை
உள்ளம் உடைமை உடைமை =ஊக்கம் உடைமையே ஒருவருக்கு நிலையான உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் = ஊக்கம் இல்லாமல் ஏனையப் பொருள் செல்வங்கள் இருப்பினும் அது அவனை விட்டு நீங்கிவிடும்.
பார்க்காதப் பயிர் பாழ்; கேட்காத கடன் கோவிந்தா!
Where there is a will there is a way என்பார்கள் ஆங்கிலத்தில்.
ஊக்கம் இருந்தால், அதற்கான உழைப்பும் உடன் இருந்தால் உலகம் உன் கையில்! என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments