20/12/2021 (300)
சில செய்திகள் எவ்வளவோ பழையதாக இருந்தாலும், எண்ணும் போது நம்மை பாடாய்படுத்தும். நம்மை நிதானமிழக்கச் செய்யும். ‘சென்றதுபோக நின்றது மிச்சம்’ என்ற வகையிலே அந்த எண்ணங்களை விலக்கி விட்டு நாம் நம் வாழ்க்கையைத் தொடருவோம். அதையே பிடித்துக் கொண்டு இருப்பதில்லை. நினைவுகள் வரும், உடனே, வேறு எண்ணங்களைக் கொண்டு, அல்லது செய்யவேண்டியச் செயல்களைக் கொண்டு அதனை விலக்கிவிடுவோம். இல்லை என்றால் சிக்கல்தான்.
“என்ன காந்தியார் இறந்துவிட்டாரா?” என்பதுபோல ஆகிவிடுவோம்.
இதைத்தான் உவமையாகச் சொல்கிறார் நம் பேராசான்.
நட்பிலும், சிக்கலைத்தரும், சிந்தையைக் குழப்பும், சீரழிக்க முயலும் நட்புகளும் வரும். துன்பம் வரும்போது தூங்கிவிடும் அல்லது தூங்கிவிட்டாற்போல நடிக்கும் நட்புகளும் உண்டு. அதை நல்ல நட்புகளைக் கொண்டு விலக்கிவிட வேண்டும் என்கிறார் குறள் 798ல்.
“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.” --- குறள் 798; அதிகாரம் – நட்பாராய்தல்
உள்ளம் சிறுகுவ உள்ளற்க = நமது உள்ளத்தில் ஊக்கத்தைக் குலைக்கும் எண்ணங்களை எண்ணாதுவிடுக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்பு கொள்ளற்க = (அது போல) துன்பம் வரும் போது கைவிடும் நட்பைத் தவிர்த்துவிடுக.
இரண்டு செய்தி: 1. கைவிடும் நட்பைத் தவிர்க்க; 2. அதை மேலும் நினையாது ஒழிக
நம் தொடருக்கு இன்று 300வது நாள். இதுகாறும் வாழ்த்துகளையும், கருத்துகளையும் வழங்கிவரும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.
மேலும் தொடர முயல்கிறேன் உங்கள் வாழ்த்துகளுடன்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments