02/02/2023 (700)
இன்றைக்கு கம்பராமாயணத்தில் ஒரு இடம்.
அதாவது, விசுவாமித்திர முனி, இராமனுக்கு பெண் கேட்க மிதிலையில் உள்ள சனகனின் அவைக்குச் செல்கிறார். (ஆமாம், நிச்சயம் அந்த, அந்த இந்திர தனுசு எனும் வில்லை முறிக்க வேண்டும்! – அது தனி கதை). அங்கே, இராமனை சனகனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
எப்படி அறிமுகப் படுத்துகிறார் என்றால் இராமன் பெரிய சூரன், வீரன் என்றெல்லாம் திறத்தை எடுத்துக் கூறுகிறார். அதன் பிறகு அவனின் குலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்தப் படலத்திற்குப் பெயர் “குலமுறை கிளத்து படலம்” என்று பெயர். குறிப்பாக, அவனின் அப்பா யார் என்று சொல்ல வேண்டும்!
அதில் என்ன தயக்கம் என்கிறீர்களா? இருக்கே, ஒரு சிக்கல்!
எந்த ஒரு தகப்பனும், தன் மகளுக்கு வருகின்ற கணவன், தன் மகளை மட்டுமே எண்ணத்தில் கொள்ள வேண்டும் என்பது இயற்கைதானே? ஆனால், இராமனின் தந்தையான தசரதனுக்கு அறுபதனாயிரம் மனைவியர்களாம்! அப்பனுக்கு அறுபதனாயிரம் என்றால் மகனுக்கு எவ்வளவு வேண்டும்? ... என்று சனகன் எண்ணிவிட்டால்? ... மறுத்துவிட்டால்? இப்படி பல கேள்விகள் விசுவாமித்திர முனியின் நெஞ்சினில்!
அதனாலே, வேக, வேகமாகச் சொன்னாராம். இதோ இருக்கிறானே , இராமன் - இவன் தந்தையின் பெயர் தசரதன். ஆனால், இராமன் அவனுக்கு பெயருக்குத்தான் புதல்வன் என்றாராம். அதாவது, தசரதன் பெயருக்கு மட்டும்தான் தந்தை என்றாராம்! இது என்ன அநியாயம். தசரதன் தான் தந்தை ஆனால் பெயருக்கு மட்டும்தான் என்றால்?
அடுத்து, வேக வேகமாகத் தொடர்ந்தாராம் விசுவாமித்திர முனி. நீ பெரிய மகாராஜா இல்லையா சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேள். இராமனுக்கு உபநயனம் முடித்து, மற்ற எல்லாம் சொல்லிக் கொடுத்து இவனை வளர்த்தது வசிட்டன் எனும் மகாமுனி என்றாராம்.
வசிட்ட முனிக்கு அருந்ததி என்ற ஒரு மனைவிதான். அவரிடம், இராமன் வளர்ந்ததாலே, இராமனும் அவ்வாறே இருப்பான் என்று சொல்லாமல் அழுத்திச் சொன்னாராம்!
“திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற்கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்!
உறைஓடும் நெடு வேலாய்! உப நயன விதி முடித்து
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்.” – பால காண்டம், கம்பராமாயனம்
(இந்தப் பாடலை கடகடவென படிக்கும் முறையில் அமைத்துள்ளார் தமிழ் பெருங்கவி கம்பர் பெருமான்)
தசரதன் ஒரு பெரிய ராஜா; ரொம்பவே பொறுமையானவன்; அவனுக்கு இவன் பெயருக்குத்தான் புதல்வன்; நீயும் ஒரு பெரிய ராஜாதான்; இவனுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்து வளர்த்தவன் யார் என்று கேட்டால், அவர் வசிட்ட முனி என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாராம் விசுவாமித்திர முனி!
(மேலே கண்டவை பேராசிரியர் அ.சா. ஞானசம்பந்தன் அவர்களின் ‘இராமன் பன்முக நோக்கில்’ எனும் நூலில் இருந்து. ஆசான் அ.சா.ஞா வைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் வரும்போது விரிக்கலாம் என்றார் ஆசிரியர்)
சரி, இப்போ இந்தக் கதை எதற்கு என்பது தானே உங்கள் கேள்வி?
நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை ஒரு கேள்வியைக் கேட்கிறார். முகத்திலே பெயருக்கென்று கண்கள் இருந்தால் அது யாருக்கத் தம்பி பயனளிக்கும்? அதாவது, கண் என்று இருந்தால் அதில் இரக்கனும் ராஜா என்கிறார்.
“உளபோல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.” --- குறள் 574; அதிகாரம் – கண்ணோட்டம்
அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் = செயலினால் இரக்கத்தைக் காட்டாத கண்கள்;
முகத்து உளபோல் எவன் செய்யும் = முகத்தில் இருப்பது போல பெயருக்கு இருந்தால் என்ன பயன்.
செயலினால் இரக்கத்தைக் காட்டாத கண்கள், முகத்தில் இருப்பது போல பெயருக்கு இருந்தால் என்ன பயன்?
இரக்கம் தம்பி, அதுதான், மனதிலே அன்பைப் பெருக்கி அருளுக்கு அழைத்துச் செல்லும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments