18/04/2023 (775)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அவை அஞ்சாமை எனும் அதிகாரத்தில் ஒரு பாடலைப் பார்த்தோம். காண்க 17/04/2023. மீள்பார்வைக்காக:
“உளர்எனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.” --- குறள் 730; அதிகாரம் – அவை அஞ்சாமை
அவைக்கு அஞ்சி கற்றதை விரித்து உணரச் சொல்லாதவர், அவர்கள் இருந்தாலும், இல்லாதவர்களோடுதான் அவரையும் சேர்க்க வேண்டும்.
இந்தக் குறளில் இரு படி நிலைகளைச் சொல்கிறார். முதல் படி நிலை என்பது அந்த அவைக்குள் நுழையும் அளவிற்கு தகுதி பெறுவது. அதாவது கற்பது. இரண்டாவது படி நிலை என்பது நுழைந்தப் பின் கற்றதை அவையோர்கள் ஏற்கும் வண்ணம் செலச் சொல்வது. அஃதாவது, நன்றாகக் கற்பது.
களன், களம், அவை என்பதெல்லாம் நாம் வாழும் இந்த உலகிற்கு ஒரு குறியீடு. இந்த உலகில் பிறந்துவிட்டாலே நாம் கற்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கற்பிக்கப்படுவோம்!
ஏதோ 'அவை' என்று ஒன்று இருக்கும், அங்கே போக வேண்டியவர்களுக்குத்தான் தகுதிகள் தேவை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
இந்தக் கருத்தை நம் பேராசான் கல்லாமை எனும் 41ஆவது அதிகாரத்தில் தெளிவுபடுத்துகிறார்.
ஒருவர் கற்கவில்லை என்றால் அவர்கள் எல்லாம் ஒரு கணக்குக்குத்தான் (statistics) உயிரோடு இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அவர்களை விளைவிக்க முடியாத, பயனில்லாத களர் நிலத்திற்கு உருவகப்படுத்துகிறார்.
“உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.” --- குறள் 406; அதிகாரம் – கல்லாமை
மாத்திரை = அளவு, கணக்கு; களர் = விளைச்சலுக்குப் பயன்படா நிலம்.
கல்லாதவர் உளர் என்னும் மாத்திரையர் அல்லால் = கல்லாதவர்கள் நம் பார்வைக்கு ஒரு ஆளாகத் தெரிவதால் ஒரு கணக்குக்கு இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர; பயவாக் களர்அனையர் = மற்றபடி, அவர்கள் பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பர்.
கல்லாதவர்கள் நம் பார்வைக்கு ஒரு ஆளாகத் தெரிவதால், ஒரு கணக்குக்கு இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்றபடி, அவர்கள் பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பர்.
முதலில் கற்க வேண்டும். இரண்டாவது நன்றாகக் கற்க வேண்டும்.
கற்போம். கற்பதை நன்றாகக் கற்போம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare