top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

உளவரை தூக்காத 480, 214, 41

Updated: Nov 10, 2022

09/11/2022 (615)

‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே பார்த்தக் குறள்தான். காண்க 25/06/2021 (123). மீள்பார்வைக்காக:


ஓத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.” ---குறள் 214; அதிகாரம் – ஒப்புரவு அறிதல்


உயிர்வாழ்வான் ஓத்தது அறிவான் = உயிரோடு ஒருவன் இருக்கிறான் என்பதற்கு பொருள், அவன் இல்லை என்போருக்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவுவதில்தான் உள்ளது.

மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் = அவ்வாறு உதவாமல் இருப்பவர்களை செத்தாருள்தான் வைக்க வேண்டும். அதாவது, அவர்கள் இருந்தும் என்ன பயன்?


‘ஒப்புரவு அறிதல்’ என்பது உலக நடையினை அறிந்து செய்தல் அல்லது கொடுத்தல் என்று மணக்குடவப் பெருமானும், பரிமேலழகப் பெருமானும் சொல்கிறார்கள்.


இல்லறத்தானுக்கு என்ன உலக நடை?


இல்லறத்தானுக்கு பதினோறு கடமைகள் என்று வரையறுத்த நம் பேராசான் (காண்க 01/03/2021 (43)), முதலில் சொல்வது ‘இயல்புடைய மூவர்க்கும்’ துணையாக இருப்பது. மீள்பார்வைக்காக நாம் முன்பு பார்த்த ஒரு குறள். காண்க 26/02/2021 (40).


“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” ---குறள் 41; அதிகாரம் - இல்வாழ்க்கை


இல்வாழ்வான் என்பான்= இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்; இயல்புடைய மூவர்க்கும் = ஏனைய மூன்று பருவத்தார்க்கும்; நல்லாற்றின் = (அவர்களின் அறத்துடன் கூடிய)நல் வழிக்கு; நின்ற துணை = நிலைத்து நிற்கின்ற துணை


அன்பின்பாற்பட்டு இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், தங்களுக்குத் தொடர்புடைய ஏனைய மூன்று பருவத்தார்க்கும் அவர்களின் அறத்துடன் கூடிய நல் வழிக்கு நிலைத்து நிற்கின்ற துணையாக இருக்க வேண்டும். அதுவே இல்வாழ்வோர்க்கு இன்பம் பயக்கும்.


இது நிற்க. தலைவனுக்கு ‘ஒப்புரவு அறிதல்’ என்றால் என்ன?


அதாங்க, அவனுக்கும் ‘உலக நடை அறிந்து செய்தல்’தான். தலைவனுக்கு என்ன உலக நடை?


தன் துணைகளுக்கு அளவறிந்து ஈவது!


இங்கே மட்டும் ஏன் அளவு?


அது ஏன் என்றால் அவனுக்கு வரும் செல்வங்கள் எல்லாம் அவனுடையது அல்லவே! மக்கள் தங்கள் வரிப் பணத்தை, தங்கள் பங்காக அவனுக்கு அளிக்கிறார்கள். நாட்டுக்கே நல்லது செய்ய வேண்டுமென்றாலும் அவனின் கடமை அதை சீர் தூக்கிப் பார்த்து செய்வதுதான்.


அவனின் சொந்தப் பணத்தைக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் அவன் உதவலாம். ஊராரின் பணத்தை ஊதி விடுவதற்கு அவனுக்கு அதிகாரம் இல்லை. அவன், அவ்வாறு செய்தால் எல்லாம் அழியுமாம்.


உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.” --- குறள் 480; அதிகாரம் – வலியறிதல்


தூக்காத = சீர் தூக்கிப் பார்க்காத; ஒப்புரவு ஆண்மை = உதவி செய்தல் எனும் நிர்வாகம்; வரை = எல்லை; வல்லை = விரைவில்;

உளவரை = உள்ள செல்வத்தின் எல்லை; வளவரை = வரும் வளத்தின் எல்லை;


உளவரை தூக்காத ஒப்புர வாண்மை = உலக நடை அறிந்து, உள்ள இருப்பைச் சீர் தூக்கிப்பார்க்காது, ஊதாரித்தனமாக உதவும் தலைமையினால்; வளவரை வல்லைக் கெடும் = வளம் வரும் எல்லைகளும் விரைவில் காணாமல் போகும்.


உலக நடை அறிந்து, உள்ள இருப்பைச் சீர் தூக்கிப்பார்க்காது, ஊதாரித்தனமாக உதவும் தலைமையினால், வளம் வரும் எல்லைகளும் விரைவில் காணாமல் போகும்.


அந்த நாடும் கெடும். அந்தத் தலைவனும் ‘உதவாக்கரை’ ஆகிவிடுவான். அதாவது உதவ முடியாத எல்லைக்குச் சென்றுவிடுவான். (கரை = எல்லை)

ஆகையால், தலைவர்களே அளவறிந்து ஈக!


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்






Comments


Post: Blog2_Post
bottom of page