21/06/2024 (1203)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவளின் பாராமுகம் அவனை வருத்தியது. ஒரு வேளை தன் சட்டையின் பொத்தான்களைச் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லையோ என்று சரி பார்க்கிறான். அப்பொழுதுதான் தெரிந்தது, அவன் முதலிரண்டு பொத்தான்களைப் போட்டுக் கொள்ளவில்லை. அதன் ஊடாக அவனின் மார்பு சற்று வெளியே தெரிந்து கொண்டுதான் இருந்தது.
ஓஒ கண்டு பிடித்து விட்டேன். இனி பாரும். அனைத்து பொத்தான்களையும் போட்டுக் கொண்டு அதன் மேல் Suit என்கிறார்களே அந்த மேல் அங்கியையும் போட்டுக் கொள்கிறேன் என நினைத்து அவனின் கல்லூரிப் பருவத்தில் வாங்கிய அந்த அரதப் பழைய அங்கியைத் தேடுகிறான். அவனின் மூக்கினில் நெடி ஏறுகிறது. அடக்க முடியவில்லை. ஒரு தும்மல் போடுகிறான்.
அவ்வளவுதான், அவள் ஓடோடி வருகிறாள். அவன் ஐயோ பாவம் அப்புசாமியாக நிற்கிறான். அவளோ பாக்கியம் ராமசாமியின் சீதாப் பாட்டியாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நிற்கிறாள்.
அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. இருப்பினும், அடக்கிக் கொண்டு, என்ன தும்மறீங்க? வழக்கம் போல யாராவது தும்மினால், “நல்லா இருங்க” என்று சொல்வார்களே அதைப் போல உங்களைச் சொல்வேன் என்று நினைத்தீர்களா? அது நடக்காது, நடக்கவே நடக்காது.
அப்பவே சொன்னார்கள் நீங்கள் தலை சிறந்த நடிகர் என்று! மூணாம் கிளாசில் மூக்கு ஒழுகிக் கொண்டு ஒரு நாடகத்தில் நடித்தீர் என்று ஒரு புகைப்படத்தை காட்டிய பொழுதே நான் சுதாரித்துக் கொண்டிருக்கணும்!
நம்மாளு: ஐயா, யார் அந்தப் பாக்கியம் ராமசாமி?
அவரா, அவரின் இயற் பெயர் ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன். அவரின் தாய் தந்தைப் பெயர்களை இணைத்துப் புனைப் பெயர் வைத்துக் கொண்டார். அவர் ஒரு நாடறிந்த நகைச் சுவை எழுத்தாளர். அவர் படைத்த நகைச்சுவை பாத்திரங்கள்தாம் அப்புசாமியும் சீதாப் பாட்டியும். அவரின் சில நாவல்கள்: அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், மாணவர் தலைவர் அப்புசாமி, அப்புசாமியும் 1001 இரவுகளும்.
இது நிற்க. பேராசான் நம் அப்புசாமி – சீதாப்பாட்டி நாடகத்திற்கு எப்படி பாடல் எழுதுகிறார் என்று பார்ப்போம்.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. – 1312; - புலவி நுணுக்கம்
என்பாக்கு = என்று சொல்லுதல்; ஊடி இருந்தேமாத் தும்மினார் = நாங்கள் ஊடிக் கொண்டு பேசாமல் இருந்த நேரத்தில் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ் என்பாக்கு அறிந்து = நான் அவரை நீடு வாழ்க என்று சொல்லும் வழக்கத்தைக் கைவிடாமல் அவர் வாழி என்று சொல்லிப் பேச்சைக் கொடுப்பேன் என்று நினைத்தாரோ?
நாங்கள் ஊடிக் கொண்டு பேசாமல் இருந்த நேரத்தில் தும்மினார். நான் அவரை நீடு வாழ்க என்று சொல்லும் வழக்கத்தைக் கைவிடாமல் அவர் வாழி என்று சொல்லிப் பேச்சைக் கொடுப்பேன் என்று நினைத்தாரோ?
இயல்பாய் வந்த தும்மலை வருந்தி வரவழைத்ததாக கற்பித்து மீண்டும் ஊடுகிறாள்.
தும்மும்போது “வாழ்க” என்று பிறர் சொல்வது பண்டைய மரபு. இப்பொழுது, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு தும்முங்கப்பா என்பார்கள்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments