27/02/2022 (366)
தோழி மறுநாள் காலை சற்று காலம் தாழ்த்தியே வருகிறாள். ‘அவள்’ வாசலிலேயே தோழி வருகைக்காக காத்திருக்கிறாள்.
தோழி: என்ன செய்தி? ஏதோ, உன் முகம் வேற மாதிரி இருக்கு? எங்கே உன்னவர்?
அவள்: உள்ளேதான் தூங்க்கிட்டு இருக்கார். நீ நேற்று போன பிறகு, ஒரு முடிவோட இருந்தேன். வரட்டும், உண்டு இல்லைன்னு ஒரு வழி பண்ணிடலாம்ன்னு…
தோழி: ம்ம். . அப்புறம், பெரிய சண்டையாயிடுச்சா?
அவள்: அதை ஏன் கேட்கிற? புதுசா மேடை ஏறி பேசப் போறவங்க தன் பேச்சை மறக்கிற மாதிரி, வெளிச்சம் வந்த உடனே இருட்டு காணாம போற மாதிரி, என் வைராக்கியம் எல்லாம் அவரைப் பார்த்த உடனே காணாமப் போயிடுச்சு. அது மட்டுமல்ல, நானுமே காணாம அவரில் கரைந்து போனேன்…
நீ நேற்று என் கூட தங்கியிருக்கலாம் இல்லை? எல்லாம் உன்னாலேதான்!
தோழிக்கு ‘ங்கே’ என்று விழிப்பதைத் தவிர வேற வழியில்லை.
அவளே தொடர்கிறாள். எனக்கு மட்டும் நடப்பது இல்லை. திருவள்ளுவப் பெருமான் சொல்வதைக் கேளு…
“ஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு” --- குறள் 1284; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
ஊடல்கண் சென்றேன் தோழி = சண்டை போடலாம்ன்னு போனேன் தோழி; அதுமறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு = (அவரைப் பார்த்த உடனே) நான் சண்டையை மறந்தேன், என்னையும் மறந்தேன்.
தோழி: வீட்டிலே கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு பார்க்கலாம். வரட்டுமா?
அவள்: … (இந்த உலகத்திலேயே இல்லை)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments