top of page
Search

ஊடலின் உண்டாங்கோர் ... 1307, 1282, 945, 18/06/2024

18/06/2024 (1200)

அன்பிற்கினியவர்களுக்கு:

சின்னச் சின்ன உரசல்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை இரசிக்கத் தக்கதாக இருக்காது. அஃது, உப்பினைப் போல அளவாக இருக்க வேண்டும் என்றார்.

 

ஊடல் சற்று நீண்டால் துன்பம்தான். கூடி முயங்குவது தள்ளிப் போகும்.  எச்சரிக்கை வேண்டும் என்கிறார். அது மட்டுமன்று, கூடி முயங்கும் போது அந்த ஊடலைக் குறித்த பேச்சுவரின் அவ்வளவுதான்.

 

மிகவும் மகிழ்ந்திருக்கும் தருணத்தை விரும்பும் இணையர்கள் வேண்டுவது: “சாமி, கொஞ்ச நேரத்துக்கு எந்தச் சின்ன சண்டையும் வராமல் இருக்கணும்டா” அது போதும்னு வேண்டுவதில்லையா!  இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 05/04/2021. மீள்பார்வைக்காக:

 

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின். - 1282; - புணர்ச்சிவிதும்பல்

 

சரி, நாம் புலவிக்கு வருவோம்.

 

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொல் என்று. – 1307; - புலவி

 

ஊடலின் உண்டு ஆங்கோர் துன்பம் = முன்னர் ஊடிய ஊடலினால் பின்னர் கூடி முயங்கும் போது அவ்வூடல் குறித்த பேச்சு எழின் சிக்கல்தான்; புணர்வது நீடுவது அன்று கொல் என்று = அதனால் கூடி முயங்குவது தள்ளிப் போகலாம் அல்லவா என்றவாறு.

 

முன்னர் ஊடிய ஊடலினால் பின்னர் கூடி முயங்கும் போது அவ்வூடல் குறித்த பேச்சு எழின் சிக்கல்தான். அதனால், கூடி முயங்குவது தள்ளிப் போகலாம் அல்லவா என்றவாறு.

 

ஊடல் மேம்போக்காக இருக்க வேண்டும். அடி மனத்திற்குள் எடுத்துச் செல்லக் கூடாது. கூடி இருக்கும் பொழுது மனம் இளகும். அப்பொழுது அடி மனத்தில் இருக்கும் எண்ணங்கள் எழுந்து வாட்டும். எனவே, ஊடலை மேல் மனத்திலேயே நிறுத்த வேண்டும்.

 

ஊடல் என்பது இணையரிடம் மட்டுமல்ல நண்பர்களிடையேயும் நிகழலாம். மற்றவர்களிடமும் நிகழலாம். ஆங்கும் அவ்வாறே. ஒருவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளக் கூடாது. வேற்றுமையை அடி மனத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது. இகல் என்னும் அதிகாரத்தில் விரிவாகச் சொல்லியுள்ளார்.

 

மாறுபாட்டை மறுக்க வேண்டும். உணவாகவும் இருக்கலாம்; உறவாகவும் இருக்கலாம். காண்க 30/04/2021. மீள்பார்வைக்காக:

 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு -945;  – மருந்து

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Комментарии


Post: Blog2_Post
bottom of page