top of page
Search

ஊணுடை எச்சம் ... 1012, 983, 1013, 428, 26/05/2024

26/05/2024 (1177)

அன்பிற்கினியவர்களுக்கு:

நாணத்திற்கு இலக்கணம் பழிக்கு அஞ்சுதல் என்று முதல் குறளில் தெரிவித்தார். அடுத்து, நாணுடைமை என்பது ஓர் சிறப்புக் குணம். அது மாந்தர்களில் உயர்ந்தவர்களைச் சிறப்பித்துக் காட்டும் என்கிறார். 

 

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு. – 1012; - நாணுடைமை

 

ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல = உண்பதும் உடுத்துவதும் பிள்ளைகளைப் பெறுவதும் மாந்தர்களுக்கெல்லாம் வேறு அல்ல. அவை பொதுப் பண்புகள்; நாணுடைமை மாந்தர் சிறப்பு = ஆனால், மாந்தர்களை வேறுபடுத்திக் காட்டுவது எதுவென்று கேட்டால் பழிக்கு அஞ்சும் நாணுடைமை என்னும் குணம்தான்.

 

உண்பதும் உடுத்துவதும் பிள்ளைகளைப் பெறுவதும் மாந்தர்களுக்கெல்லாம் வேறு அல்ல. அவை பொதுப் பண்புகள். ஆனால், மாந்தர்களை வேறுபடுத்திக் காட்டுவது எதுவென்று கேட்டால் பழிக்கு அஞ்சும் நாணுடைமை என்னும் குணம்தான்.

 

ஊண் என்றால் உணவு; ஊன் என்றால் உடல், மாமிசம், தசை, கொழுப்பு. ணகர னகர வேறுபாட்டைக் கவனிக்க.

 

சான்றாண்மைக்கு ஐந்து தூண்கள் என்றார். அவை யாவன: அன்பு, பழிக்கு அஞ்சுதல், பிறர்க்குக் கொடுத்து உதவுதல், இரக்கம், தீமை பயவாத செயல். காண்க 05/05/2024. மீள்பார்வைக்காக:

 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண். – 983; - சான்றாண்மை

 

மேற்கண்ட ஐந்திலும் எது முக்கியம் என்றால் பழிக்கு அஞ்சுதல் என்கிறார். ஏன் எனின், எனைய நான்கும் ஒரு வழிப் பாதை. அஃதாவது, அன்பினைச் செலுத்துவோம்; பிறர்க்கு ஒன்று ஈவோம்; இரக்கம் கொள்வோம்; பொய்மையைப் பேசோம்.

 

ஆனால், பழிக்கு அஞ்சுதல் இருவழிப் பாதை. அஃதாவது, பழி வரும் கருமங்களைச் செய்யாமல் இருப்பது; பழி வருமாறு தவறி நடந்துவிட்டால் மனம் வருந்தி திருத்திக் கொள்வது. இவ்விரண்டுமே பழிக்கு அஞ்சுதலைச் சாரும். எனவே, பழியைத் தவிர்ப்பதில் கூடிய கவனம் தேவை.

 

இந்தக் கருத்தை நம் பேராசான் இவ்வாறு வடிக்கிறார்:

 

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்

நன்மை குறித்தது சால்பு. – 1013; - நாணுடைமை

 

உயிரெல்லாம் ஊனைக் குறித்த = உயிர்கள் உடலை அடைப்படையாகக் கொண்டு இயங்குவன; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது = அது போலச் சான்றாண்மை என்பது பழிக்கு அஞ்சுதல் என்னும் நல்ல குணத்தை அடிப்படையாக கொண்டது.

 

உயிர்கள் உடலை அடைப்படையாகக் கொண்டு இயங்குவன. அது போலச் சான்றாண்மை என்பது பழிக்கு அஞ்சுதல் என்னும் நல்ல குணத்தை அடிப்படையாக கொண்டது.

 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். – 428; - அறிவுடைமை

 

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது பேதைமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதுதான் அறிவுடையார் செய்கையாகும் என்றார். காண்க 01/06/2022.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Commenti


Post: Blog2_Post
bottom of page