26/11/2023 (995)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒப்புரவு ஒழுகுபவரின் கண்ணசைவில் செல்வம் வருமா?
தன் குடிகளை உயர்த்தியே தீருவேன் என்று கண்ணஞ்சாது உழைப்பவர்களுக்குத் துணையாக, அந்த இயற்கை எனும் தெய்வமே, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அவர்களுக்கு முன்னர் களத்திலே நின்று அச் செயலை செய்து கொடுக்குமாம். இதைத்தான், ஆங்கிலத்தில் providential help என்று குறிப்பார்கள்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். - 1023; - குடிசெயல்வகை
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு = தன் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்து இடைவிடாத முயற்சிகளைத் தொடரும் ஒருவற்கு; தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் = இயற்கைச் சக்திகள்/இறை சக்திகள் தாமாகவே தனது கச்சையை இறுகக் கட்டிக் கொண்டு, அவர்களுக்கு முன்னரே களத்தில் நின்று அச் செயலை செய்து கொடுக்கும்.
தன் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்து இடைவிடாத முயற்சிகளைத் தொடரும் ஒருவற்கு இயற்கைச் சக்திகள்/இறை சக்திகள் தாமாகவே தனது கச்சையை இறுகக் கட்டிக் கொண்டு, அவர்களுக்கு முன்னரே களத்தில் நின்று அச் செயலை செய்து கொடுக்கும்.
அப்படி இருக்கும் போது ஒப்புரவு ஒழுகுபவரின் கண்ணசைவில் எவைதாம் வாரா!
இதைத்தான், ஆங்கிலத்தில் providential help or luck என்று குறிப்பார்கள். அஃதாவது, நற்பேறு (Luck) என்பது என்னவென்றால் நமது எண்ண ஓட்டங்களின் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்போது (preparedness) அதற்கு ஏற்றார்போல் வாய்ப்புகள் (opportunity) தோன்றுவது. Luck is when preparation meets opportunity!
ஒப்புரவு ஒழுகுபவரைப் பயன் மரம் என்றார் குறள் 216 இல். அவர்களுக்குத் தெய்வத்தின் துணை எப்போதும் இருக்கும் என்று தெளிவுபடுத்தினார். எனவே, அவர்களின் கண்ணசைவில் செல்வம் வந்து சேரும் என்றார்.
அது எவ்வாறு சேரும் என்பதை மிக அழகானதொரு உவமை மூலம் சொல்கிறார். ஊரின் நடுவில் அனைவர்க்கும் பொதுவான ஒரு பெரிய குளம். அது ஒரு நீர் பிடிப்புக் குளம் (Catchment pond). அந்தக் குளத்திற்கு ஊரெங்கும் இருந்து நீர் வந்து சேரும். நிறையும். அந்தக் குளத்தைத் தூர்வாரி செம்மையாகப் பராமரிப்பதும் அவ் ஊர் மக்களே! அது போல, இந்த உலக நடைக்கு ஒத்திசைவாக இருந்து ஒப்புரவு ஒழுகும் பேரறிவாளரின் செல்வமானது நிறையும் என்கிறார்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. - 215; ஒப்புரவு அறிதல்
உலகு அவாம் பேரறிவாளன் திரு = உலகில் உள்ளோர்க்கு ஒத்திசைவாக இருந்து கைத்தூக்கிவிடும் ஒப்புரவு ஒழுகுபவரின் செல்வமானது; ஊருணி நீர் நிறைந்தற்றே = ஊரின் நடுவில் இருக்கும் பொதுக்குளத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக எப்படி நீர் நிறைகிறதோ அதுபோல் நிறையும்.
உலகில் உள்ளோர்க்கு ஒத்திசைவாக இருந்து கைத்தூக்கிவிடும் ஒப்புரவு ஒழுகுபவரின் செல்வமானது ஊரின் நடுவில் இருக்கும் பொதுக்குளத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக எப்படி நீர் நிறைகிறதோ அதுபோல் நிறையும்.
நம்மாளு: அப்படி சேரும் செல்வத்தை அந்த ஓப்புரவு ஒழுகுபவர் எப்படிப் பயன்படுத்துவார்?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments