18/03/2021 (60)
ஊழையும் பிரிச்சு மேய்ஞ்சுடலாம்!
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.” ---குறள் 380; அதிகாரம் – ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள = விதியை விட வலியது இருக்கா; மற்றொன்று சூழினும் = நாம என்ன தான் யோசனை பண்ணி செஞ்சாலும்; தான்முந் துறும் = விதி முன்னாடி வரும்.
அப்போ நம்ம வள்ளுவப்பெருந்தகை என்ன பண்ணியிருக்கனும்? திருக்குறளை எழுதறதை அதோட நிறுத்தியிருக்கனும். அவன் அவன் தலையெழுத்து போல நடக்கட்டும்னு நடைய கட்டியிருக்கனும். ஆனா, அவர் நிறுத்தலை.
அப்போ, இந்த குறள்கள் எதுக்குன்னு கேட்டால், ஒரு எச்சரிக்கை, விதி விலக்குகள் எப்பவும் உண்டு, தயாரா இருந்துக்கோ; தடுமாறாதே; அறமல்லதை செய்யாதே! அமைதியா இருன்னு ஒரு நிலைப்படுத்த ஒரு அருமையான பாட்டு:
“மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.” --- கவியரசு கண்ணதாசன்
காலம் நம்மை மாறி மாறி புரட்டிப்போட்டாலும் தொடர்ந்து பயணி…
அதுவும் எப்படின்னா, நடுங்காம, தயங்காம முயற்சியிலே தொய்வு இல்லாம பயணம் இருந்தா அந்த விதியையும் வெல்லலாம். நான் சொல்லலை. வள்ளுவப்பெருமானே குறள் 620 ல் ஒரு உலுக்கு உலுக்குகிறார். இதோ அந்த குறள்:
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.” – குறள் 620; அதிகாரம் – ஆள்வினைஉடைமை
ஆள்வினைஉடைமை = பெரு முயற்சி உடைமை; உலைவு = நடுக்கம், கலக்கம்; தாழாது = தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது (விக்கிரமாதித்தன் போல!); உஞற்று பவர் = முயற்சிப்பவர்
உப்பக்கத்துக்கு முதுகுப்பக்கம்ன்னு சில அறிஞர்கள் பொருள் சொல்றாங்க. அதாவது புறமுதுகிட்டு ஓட விடறதை சொல்றாங்க. சரியாதான் இருக்கு.
மாற்றி யோசிப்போம்.
இப்பக்கம்ன்னா இந்த பக்கம்; அப்பக்கம்ன்னா அந்த பக்கம்; அப்போ உப்பக்கம்னா என்ன? உள்பக்கம்ன்னு எடுத்துக்கலாமா? எடுக்கலாம்னு தோணுது. என்ன பொருள்? தாழாது முயன்றால் ஊழையும் உள்பக்கமாவே பிரிச்சு மேய்ஞ்சுடலாம்! சரியா? தாழாது உஞற்றுபவர்க்கு இன்னொன்றும் நடக்குமாம். சொல்லியிருக்காரு பேராசான். கண்டுபிடின்னார் ஆசிரியர்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments