17/05/2022 (445)
‘எள்ளானாலும் எட்டாகப் பிரி’, ‘எள்ளானாலும் ஏழாகப் பங்கிடு’ இப்படியெல்லாம் பழமொழிகள் தமிழிலே இருக்கின்றன. சிறிய பொருளாக இருந்தாலும் உரியவர்களுக்கு சமமாகப் பங்கிடு என்பதுதான் பொருள்.
எள்ளே ரொம்ப சின்னது. அதையும் பிரித்தால் அது எவ்வளவு சின்னதாக இருக்கும்.
அந்த ஒரு துளியிலும் துளி, அதாவது ஒரு தூசியைப் போல. அந்த அளவிற்கு உள்ள பொருட்களுக்கு ஏதாவது வலிமை இருக்குமா? அது ஆளைச் சாய்த்துவிடுமா? அதுதான் கேள்வி. நீங்க என்ன நினைக்கறீங்க?
சாய்த்து விடும். அந்தப் பொருள் விஷமாக இருந்தால்!
சரி, எதற்கு இந்த செய்தி?
நம்ம பேராசான் என்ன சொல்கிறார் என்றால் ‘எள்ளின் பகவு’, அதாவது எள்ளின் துளியளவு உட்பகை இருந்தாலே போதும் அது குடியையே கெடுக்கும் என்கிறார்.
“எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.” --- குறள் 889; அதிகாரம் - உட்பகை
எட்பகவு = எள் + பகவு = எள்ளில் இருந்து ஒரு துளி; உட்பகை அன்ன சிறுமைத்தே ஆயினும் = உட்பகை அந்த அளவு சின்னதாக இருந்தாலும்; உள்ளதாம் கேடு = நிச்சயம் கேடு விளைவிக்கும்.
ஆதலினால், நம் பேராசான் சொல்லி இருப்பது மூன்று செய்திகள்தான் இந்த அதிகாரத்தில்.
1. உட்பகை உண்டாகும் என்று வாய்ப்புகள் இருந்தால் அதைத் தவிர்க்கவேண்டும்;
2. வந்த உட்பகைக்கு நாம்தான் காரணம் என்றால், அதை சரி செய்து அதை விலக்க வேண்டும்; மேலும்
3. உட்பகைக்கு மாற்றாரின் மன நிலைதான் காரணம் என்றால் விலகிவிட வேண்டும்.
சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார். அப்படி தவிர்க்க முடியலைன்னா எப்படி வாழ்க்கை இருக்கும் என்று கடைசிக் குறளில் எடுத்துக் காட்டியிருக்கிறார். அதை நாம ஏற்கனவேப் பார்த்து இருக்கோம்.
மீள்பார்வைக்காக காண்க 29/08/2021 (187).
“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.” --- குறள் 890; அதிகாரம் – உட்பகை
மனதளவிலே உடன்பாடு இல்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; ஒரு குடிலுக்குள்ளே பாம்போட சேர்ந்து இருப்பது போல.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments