07/06/2022 (466)
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப … என்ற குறளை நாம் முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 06/11/2021 (256).
மீள்பார்வைக்காக:
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.” --- குறள் 392; அதிகாரம் – கல்வி
எண்ணங்களில் இருந்துதான் எது ஒன்றும் வடிவம் பெறுகின்றது. கல் மேல் எழுத்து என்பது போல. எழுத்து என்பது வடிவத்தின் குறியீடு.
எண்ணங்களே அனைத்திற்கும் அடிப்படை. அதற்கு சரியான வடிவம் கொடுத்து முன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த இரண்டும்தான் ‘கல்வி’ என்றும் அது வாழுகின்ற உயிர்களுக்கு ‘கண்’ அதாவது முதன்மை என்றும் சொல்கிறார் நம் பேராசான் என்பது எனது கருத்து.
சரி இது நிற்க.
உணர்ச்சிகளை அறிவாயுதம் கொண்டுதான் அடக்க வேண்டும். அறிவு என்பது நல்லது எது, அல்லது எது, அதாவது தவிர்க்க வேண்டியது எது என்று பகுத்துப் பார்க்க உதவும் ஒரு கருவி. எண்ணங்களை நெறிப்படுத்த அறிவு தேவை.
ஒருவனின் நெஞ்சத்தில் உணர்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல், நல் அறிவினைச் சார்ந்த எண்ணங்களுக்கும் இடம் இருக்குமானால், எப்போதும் அவனுக்கு பாச மயக்கத்தால் பெண் ஏவல் செய்யும் பேதைமை இருக்காது. நான் சொல்லலைங்க, நம் பேராசான், பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தின் முடிவுரையாகச் சொல்கிறார்.
“எண்சேர்ந்த நெஞ்சத்து இடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.” --- குறள் 910; அதிகாரம் - பெண்வழிச் சேறல்
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு = நல் அறிவின்பால் பிரித்துணரும் எண்ணங்களுக்கு நெஞ்சத்தில் இடம் கொடுத்து இருப்பவர்களுக்கு; எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் = எப்போதும் வெறும் உணர்ச்சிகளுக்கு, அதாவது, பாச மயக்கத்தால் கட்டுப்பட்டு பெண் ஏவல் செய்தழியும் அறியாமை இல்லை.
இடன் = இடம் ( இது கடைப் போலி)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments