06/11/2021 (256)
எழுதத் தெரியாதவன் கூட சமாளிச்சிடலாம். எண்ணத் தெரியாதவன், சிந்திக்கத் தெரியாதவன் வாழுவது சாத்தியமா? சிந்தனை பிறழ்ந்தால் மனப்பிறழ்வு. இன்னொன்று, கணக்குப் போட்டு வாழத்தெரியலைன்னாலும் சிரமம்தான்.
‘எண்’ என்பது ரொம்பவே முக்கியம்ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.
‘எண்’ணத்திலிருந்துதான் எழுத்து பிறக்கிறது. எண்ணம் எண்ணமாகவே இருந்தால் அது காற்றோடு காற்றாக கரைந்துவிடும். அதாவது, அதற்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும். அதற்கு எழுத்து மிக முக்கியம். எழுத்துக்களால் வடிவம் பெற்றவை, உண்மையும் உயிர்ப்பும் இருக்குமாயின், பல தலைமுறைகள் கடக்கும்.
சரி, இப்போ இதெல்லாம் எதற்கு? இருக்கே குறள் -392
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.” --- குறள் 392; அதிகாரம் - கல்வி
இதிலே நம் வள்ளுவப் பெருமான் ‘எண்’ என்ற சொல்லுக்கு என்ன சொல்ல வருகிறார்? என்பதுதான் கேள்வி?
முதலில் எண்கள் தோன்றியிருக்க முடியுமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
எண் என்பது எண்கள் என்றும், எண்களைப் பயன்படுத்துவதால் அதை கணிதம் என்றும், கணிதம் அறிவியலுக்கு அடிப்படை என்பதால் அது அறிவியல் என்றும் இப்படி இதை நீட்டி சில அறிஞர் பெருமக்கள் பொருள் கண்டிருக்கிறார்கள். அதாவது எண்ணிற்கு அறிவியலும் (science), எழுத்திற்கு கலையியலும் (arts) என்று பொருள் எடுக்கிறார்கள். இவ்விரண்டும் கண் என்று முடிக்கிறார்கள்.
நம் பேராசான், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’ என்கிறார். ‘எண்ணுப்பா முதலில் அப்புறம்தான் எழுத்துப்பா’ என்பது போல எனக்கு கேட்கிறது. ஆனால் ஒன்று, இது இரண்டும் ‘கண்ணுப்பா’ என்கிறார் என்பதும் புரிகிறது.
நம்பேராசான், numbers and letters தான் ‘கண்’ என்ற பொருளில் இந்த குறளைப் போட்டிருப்பார் என்று பொருள் எடுக்க எனக்கு ரொம்பவே சிரமமாக இருக்கு. ஆசிரியரியைக் கேட்கனும்.
உங்க கருத்து என்ன? கேட்பதற்கு ஆவலாயிருக்கேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments