10/05/2024 (1161)
அன்பிற்கினியவர்களுக்கு:
சான்றாண்மை என்பது நல்ல குணங்களை ஆளும் தன்மை. அவ்வாறு ஆள்பவர்களே சான்றோர்கள்.
நல்ல குணங்களாவன:
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை (குறள் 983) – காண்க 04/05/2024;
பிறர்தீமை சொல்லாதிருப்பது (984) - காண்க 05/05/2024
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் (985) - காண்க 06/07/2021;
தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (986) - காண்க 06/05/2024;
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் (987) - காண்க 07/05/2024
குணங்கள் அகத்தே படிந்திருக்கும். அவற்றைப் பிறர் கண்டறிவது அவ்வளவு எளிதில்லை. ஆனால், பண்புகள் என்பன புறத்தில் தெரிவன.
மாம்பழம் மஞ்சள் நிறத்தில், சுவைத்தால் இனிமையாக இருப்பது.
மஞ்சள் நிறமும், இனிப்புச் சுவையும் அதன் பண்புகள். அவற்றை நம் புலன்களால் கண்டு கொள்ள முடியும். அதற்குக் காரனமானவை உள்ளே ஒளிந்திருக்கும்!
ஆய்வாளர்களைக் கேட்டால் சர்க்கரை அமில விகிதம், வாசனைக் கலவைகளின் தன்மை என்றெல்லாம் விளக்குவார்கள். இவை சரியாக அமையாவிட்டால் அந்தக் கண்ணைக் கவரும் மஞ்சள் நிறத்தால் பயனில்லை.
அது போன்றே, உள்ளே சரியாக இருந்து வெளியே நாம் அனுகும் விதமாக இல்லை என்றாலும் பயன் ஏதும் இல்லை.
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு? இதோ வருகிறேன்! சான்றாண்மையைத் தொடர்ந்து பண்புடைமை என்னும் அதிகாரத்தை வைக்கிறார் நம் பேராசான்.
மணக்குடவர் பெருமான்: பண்புடைமை யாவது பெருமை, சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகல்.
… பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் - கலித்தொகை பாடல் 133
பண்புடைமை அமைய வேண்டுமா அது மிகவும் எளிது. ஆமாம், எளிமையாக இருப்பதுதான் பண்புடைமைக்கு அடிப்படை.
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. – 991; - பண்புடைமை
பண்புடைமை என்னும் வழக்கு = பண்புடைமையை வழக்கமாக்கிக் கொள்வதற்கு; யார்மாட்டும் எண்பதத்தால் எளிது எய்தல் என்ப = அனைவரிடமும் எளிமையாகப் பழகினால் போதும். எளிமையாக அடைந்துவிடலாம் என்பர். இது உலக வழக்கு.
பண்புடைமையை வழக்கமாக்கிக் கொள்வதற்கு, அனைவரிடமும் எளிமையாகப் பழகினால் போதும். எளிமையாக அடைந்துவிடலாம் என்பர். இது உலக வழக்கு.
செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் தலைவர்களுக்கு இலக்கணம் சொல்லும்போதும் இந்தக் கருத்தையே முன்னிறுத்தினார். காண்க 04/01/2023. மீள்பார்வைக்காக:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். - 548; - செங்கோன்மை
காட்சிக்கு எளியனாகி ஆராய்ந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்யாத தலைமை தாழ்ந்து பழியும், பாவமும் எய்தி தானாக கெடுவான்.
யார் மாட்டும் காட்சிக்கு எளியனாக இருப்பது முதல் பண்பு.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments