23/10/2023 (961)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பிறன் இல் விழைவார் இறந்தார்க்குச் சமம் என்றார் குறள் 143 இல். மேலும், அவர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் பிறன் இல் புகுந்துவிட்டால் கால் தூசிக்குக்கூட பெறமாட்டார்கள் என்கிறார். அஃதாவது, அவர்களின் நன்மதிப்பை, மரியாதையை இழப்பார்கள்.
“எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.” --- குறள் 144; அதிகாரம் – பிறனில் விழையாமை
பிறனில் புகல் தினைத்துணையும் தேரான் = நம்பிக்கைத் துரோகம் செய்து பிறன் துணையைக் கவர்வது எவ்வளவு பெரிய பிழை என்று சிறிதளவும் யோசியாமல் நடப்பவர்; எனைத் துணையர் ஆயினும் என்னாம் = எவ்வளவுதான் பெருமையுடையவராக இருப்பினும் என்ன பயன்?
நம்பிக்கைத் துரோகம் செய்து பிறன் துணையைக் கவர்வது எவ்வளவு பெரிய பிழை என்று சிறிதளவும் யோசியாமல் நடப்பவர், எவ்வளவுதான் பெருமையுடையவராக இருப்பினும் என்ன பயன்?
நன்மையை நோக்கிச் சிந்திக்கத் தெரிந்தால் அவர் ஏன் திசைமாறிச் செல்ல வேண்டும்?
அவர்களின் சிந்தனை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதால் அங்கே அறிவு வெல்வதற்கு வழியில்லை. எண்ணங்களையெல்லாம் செயல் வடிவங்கள் ஆக்கிவிடத் தேவையில்லை. எண்ணங்களும் அந்த எண்ணங்களை எடுத்துச் சிந்தித்தலும் வேறு வேறு. (Thoughts and thinking are very different; Thoughts are involuntary; whereas thinking is voluntary). எண்ண அலைகள் நமது முயற்சியின்றியே தோன்றும்; அந்த எல்லா எண்ணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு நாம் அதன்பின் செல்வது, குழப்பிக் கொள்வது என்பது தேவையற்றன. தேவையான எண்ணங்களை மட்டும் சிந்தித்துச் செய்தால் போதுமானது. இந்தத் தெளிவுதான் ஞானம் என்கிறார் நம்முடன் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பகவத் ஐயா அவர்கள்.
ஒரு பல்பொருள் அங்காடியில் (super market) பல விதமான பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் பார்க்கும் நாம், நமக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்கிறோம் இல்லையா, அதைப் போல எண்ண அலைகள் ஆயிரம் தோன்றலாம். அதனில், எது நமக்கு நல்லது, ஏற்றது என்று தெளிந்து அதற்கு மட்டும் செயல் வடிவம் கொடுப்பது ஞானம் (wisdom).
“பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி
பூவைப் பறிக்கவே நேரம் இருக்கா
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா …
பூவும் உண்டு அதில் நாகம் உண்டு …
போராடி வெல்கின்ற வீரம் உண்டு
வீரம் கொண்டு நீ வெற்றி கண்டால்
கொண்டாடி வரவேற்கும் முதலில் வந்து வா வா…” திரைப்படம் – கூலி (1995); சுரேஷ் பீட்டர்ஸின் இசையில்.
இந்தத் துள்ளல் பாட்டை, இது வரை கேட்கவில்லையென்றால், ஒரு முறை கேளுங்கள்.
பூமி எங்கும் பூக்கள் இருக்கும். அனைத்துமே அழகுதான். ரசிக்கலாம். அனைத்தையும் அடைய ஆசை கொண்டால் துன்பம்தான். எந்தப் பூ நமக்கானப் பூ; அந்தப் பூவில் நாகம் ஒளிந்திருக்குமா என்றெல்லாம் தேர்ந்தெடுத்து வெற்றி பெற ஞானம் வேண்டும்!
திரை இசைப் பாடல் என்றாலும் மிகவும் ஆழமானப் பாடல்.
Thoughts and thinking are different … யோசிப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments